தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுக தனது தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக டிசம்பர் 17 அன்று, கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, 12 உறுப்பினர்கள் கொண்ட ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.
கனிமொழி இதற்கு முன்பும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கைக் குழுவை வெற்றிகரமாக வழிநடத்தினார். அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் அனைத்து 39 தொகுதிகளிலும் வென்றது ஒரு பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இதே வெற்றியை 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர்வதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இக்குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். பொதுநல அமைப்புகள், வணிகர் சங்கங்கள், இளைஞர்கள், விவசாயிகள் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், தோழமை இயக்கங்கள் மற்றும் பொதுமக்களின் நலன் சார்ந்த பல்வேறு குழுக்களுடன் கலந்தாலோசனை நடத்தி கருத்துக்களைச் சேகரிக்கும்.

இந்தக் கருத்துக்கள் அடிப்படையிலேயே 2026 தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். குழுவின் உறுப்பினர்களாக அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள், அமைச்சர்கள், நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் மூன்று டாக்டர் பட்டதாரிகள், ஒரு மருத்துவர், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி, தொழிலதிபர் போன்றோர் உள்ளனர். இந்த தேர்தல் அறிக்கை குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதை எடுத்து முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த தேர்தல் அறிக்கை குழுவினர் வாழ்த்து பெற்றதுடன் சுற்றுப்பயணம் தொடர்பான விவரங்களை முதலமைச்சருடன் வழங்கினர். இதன்பிறகு தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க: முதலமைச்சருடன் திமுக தேர்தல் அறிக்கை குழு முக்கிய சந்திப்பு... அந்த லிஸ்ட் கொடுத்துட்டாங்களாம்...!
அப்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு முன்னுரிமை தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, வேலைவாய்ப்பு பெண்ணுரிமை, சமூக நீதியை காக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என கனிமொழி உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்... தேர்தல் அறிக்கை குழு ரெடி... திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!