கர்நாடக அரசு 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று (மார்ச் 6) சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. முதலமைச்சர் சித்தராமையா இந்த பட்ஜெட் உரையில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் சமூக ஊடகங்களை முற்றிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது.
இந்த முடிவு, குழந்தைகள் அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாட்டால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி, மன அழுத்தம், தூக்கமின்மை, கவனச்சிதறல், மனநல பிரச்னைகள் போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சித்தராமையா தெரிவித்தார்.

குழந்தைகளின் மனநலத்தைப் பாதுகாப்பதும், அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்வதும் இதன் முதன்மை நோக்கமாக உள்ளது. முன்னதாக, பெங்களூருவில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் இத்தகைய கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது, சிறார்களின் மொபைல் பயன்பாடு கல்வி, ஒழுக்கம், மன ஆரோக்கியம் ஆகியவற்றை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இப்போது, பட்ஜெட் உரையில் இதை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக மாற்றியுள்ளார் முதலமைச்சர்.
இதையும் படிங்க: கர்நாடக கார்கேவிற்கு எம்.பி. சீட்?.... காங்கிரஸிடம் அடிபணிந்த ஸ்டாலின் தமிழருக்கு துரோகம் செய்யும் திமுக...!
இந்தத் தடையை எவ்வாறு செயல்படுத்துவது, எந்தெந்த விதிகள் அமல்படுத்தப்படும் என்பது குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற உள்ளன. நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறார்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் "புத்தகத்தை ஏந்து, மொபைலை கைவிடு" என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இது அனைத்து வயதினரையும் புத்தகங்களை நோக்கி ஈர்க்கும் முயற்சியாக அமையும்.

ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் ஏற்கெனவே சிறார்களுக்கு சமூக ஊடக பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இந்தியாவில் மாநில அளவில் இதுபோன்ற மிகக் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் முதல் மாநிலமாக கர்நாடகா இடம்பிடித்துள்ளது. இது தொழில்நுட்ப யுகத்தில் குழந்தைகளின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் நலனை முன்னிலைப்படுத்தும் முக்கியமான அரசியல் முடிவாக பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், செயலாக்கத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: எந்த நெருக்கடியிலும் சித்தராமையாவுடன் நிற்பேன்..!! டி.கே சிவகுமார் உறுதி..!!