கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சென்னை பெண் உட்பட மூன்று பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதில், இடுக்கி மாவட்டம் வட்டவடை பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், கோட்டயம் மாவட்டம் மரியே டீக்காய் என்ற இடத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலச்சரிவின்போது, வாகமன் சுற்றுலாத் தளத்திற்குச் சென்று திரும்பிய இரண்டு பெண்கள் சிக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: கோர விபத்தில் பறிபோன 8 உயிர்கள்..! மாணவர்கள் உடலை மீட்க EPS வலியுறுத்தல்.!!
இதில், சென்னை ஜவஹர் நகரைச் சேர்ந்த 35 வயதான சங்கீதா அருண்லால், நிலச்சரிவில் சிக்கி மண் மற்றும் இடிபாடுகளுக்கு இடையே புதைந்து உயிரிழந்துள்ளார். அவருடைய தோழி சில காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கேரளாவில் வரும் 24ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கடல் சீற்றம் காரணமாகக் கடலோரப் பகுதிகளில் உயரமான அலைகள் எழக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மலைப்பாங்கான பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும், இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் மாநிலம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 8 இன்ஜினியரிங் மாணவர்கள் உயிரை காவு வாங்கிய கோரம்... வெளியானது விபத்துக்கான அதிர்ச்சி காரணம்...!