புதுடெல்லி: டெல்லியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியான SIR நடைபெற்று வரும் நிலையில், பெயர், வயது, முகவரி உள்ளிட்ட விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி 33 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
டெல்லியில் கடந்த ஜூன் 30ம் தேதி தொடங்கிய SIR பணியின் அடிப்படையில், ஆகஸ்ட் 31ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இறப்பு, வேறு தொகுதிக்கு இடமாற்றம், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் சுமார் 47.7 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்ததாக, பழைய மற்றும் தற்போதைய வாக்காளர் பட்டியல் விவரங்களுக்கு இடையே காணப்படும் முரண்பாடுகள் தொடர்பாக 33 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பெயரில் எழுத்துப் பிழை, வயது தொடர்பான தவறான பதிவு உள்ளிட்ட காரணங்களும் இதில் அடங்கும்.
இதையும் படிங்க: விஜய்யின் TVK நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலுக்கு எதிர்ப்பு! தேர்தல் ஆணையத்துக்கு பாஜக திடீர் புகார்!

ரேகா குப்தாவின் பெயர் தொடர்பான முரண்பாட்டில், அவருக்கும் அவரது பெற்றோருக்கும் இடையிலான வயது வித்தியாசம் 15 ஆண்டுகளுக்கும் குறைவாக பதிவாகியிருப்பது காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது ஆவணங்கள் தற்போது சரிபார்க்கப்பட்டு வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், அரவிந்த் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா, பெற்றோர் மற்றும் மகனுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பன்சூரி ஸ்வராஜ், கபில் சிபல் உள்ளிட்ட பல முக்கிய நபர்களின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
நோட்டீஸ் பெற்றவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் அவை பரிசீலிக்கப்பட்டு, தகுதி உறுதி செய்யப்பட்ட நிலையில் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கிய பிரமுகர்கள் நேரில் வர வேண்டிய அவசியமில்லை என்றும், பூத் நிலை அதிகாரிகள் அவர்களின் முகவரிக்குச் சென்று ஆவணங்களை சரிபார்ப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வாக்காளர் பெயர் நீக்க நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நோட்டீஸ் பெற்றவர்கள் விளக்கம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 29ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் நவம்பர் 4ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இதையும் படிங்க: திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்! இது கட்சி திருட்டு! ராகுல் காந்தி காட்டம்!