கோட்டயம்: கேரளாவில் ஒரு வயது பெண் குழந்தையின் விலா எலும்பு அருகே ஊசி ஒன்று சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் கவனக்குறைவால் இந்த நிலை ஏற்பட்டதாக குழந்தையின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது.
கோட்டயம் அருகே சாத்தமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் வினீஷ் – அஞ்சு தம்பதி. இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த சில காலத்திலேயே மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டதால், குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சில மாதங்கள் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு, குழந்தை அடிக்கடி அழுதபடி இருந்துள்ளது. மேலும், வலது பக்க விலா எலும்பு அருகே வீக்கம் இருப்பதை பெற்றோர் கவனித்துள்ளனர். இதையடுத்து குழந்தையை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் கேரள பெண்கள் இருவர் கொலை! நெருங்கிய தோழி கைது! ஓணம் கொண்டாட்டத்துக்கு மறுநாள் நடந்த அதிர்ச்சி!
அப்போது அந்த வீக்கம் சாதாரணமானது என்றும், குழந்தைகள் சில அசவுகரியங்களால் அழுவது இயல்புதான் என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாக பெற்றோர் கூறுகின்றனர். இதனால் அவர்கள் வீக்கம் குறித்து பெரிதாக கவலைப்படாமல் இருந்துள்ளனர்.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல குழந்தையின் விலா எலும்பு பகுதியில் இருந்த வீக்கம் அதிகரித்துள்ளது. குழந்தையும் தொடர்ந்து வலியால் அழுததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் குழந்தையை கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், விலா எலும்பு அருகே ஊசி ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அந்த ஊசி அகற்றப்பட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
குழந்தை பிறந்தது முதல் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் தவிர வேறு எந்த மருத்துவமனையிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை என பெற்றோர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் மருத்துவர்களின் அலட்சியத்தால் ஏற்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். புகாரின் அடிப்படையில் கோட்டயம் மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: ஆபத்தான தெருநாய்களுக்கு கருணைக்கொலை அனுமதி! கேரள அரசின் புதிய உத்தரவால் பரபரப்பு