மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, உலகின் முக்கிய எரிபொருள் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், சர்வதேச வணிக கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை உலகளாவிய எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் சப்ளை சங்கிலியை சீர்குலைத்துள்ளது. இதன் நேரடி விளைவாக, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த சூழலை சமாளிக்கும் வகையில், மத்திய அரசு வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் விநியோகத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த பின்னணியில், மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மார்ச் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில், கொல்கத்தாவில் உள்ள மாநில தலைமைச் செயலகத்தில் எண்ணெய் விநியோக நிறுவனங்கள் மற்றும் எரிவாயு விநியோகஸ்தர்களுடன் விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
இதையும் படிங்க: மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!
மேலும், மாநிலத்தில் எரிவாயு இருப்பை தொடர்ந்து கண்காணிக்கவும், ஏதேனும் விநியோக தடைகளை உடனடியாகத் தீர்க்கவும் 24 மணி நேர எல்.பி.ஜி. கட்டுப்பாட்டு அறையை மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். இதனிடையே, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைக்கும் முடிவை அறிவித்துள்ளது.
இந்த வரி குறைப்பின் பலன் நுகர்வோருக்கு கிடைக்குமா என்பது குறித்து செய்தியாளர்கள் மம்தா பானர்ஜியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “மத்திய அரசு எரிபொருள் விலையை முதலில் அபாயகரமான அளவுக்கு உயர்த்திவிட்டு, இப்போது மிகச் சிறிய அளவில் வரிகளை மட்டும் குறைக்கிறது. இந்த வரி குறைப்பின் முழு பலனும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, “தற்போது பெட்ரோல் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் இரண்டுமே போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. இருப்பினும், மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் காரணமாக பல மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் ஆணையத்தால் நீக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயு சிலிண்டர்களை வெளி மாநிலங்களுக்கு அனுப்ப அனுமதிக்கக் கூடாது” என்றார்.

அவர் மேலும் சுட்டிக்காட்டியபோது, “தேர்தல் பணிக்காக மேற்கு வங்கத்திற்கு வெளியிலிருந்து 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வருவார்கள். அவர்களுக்கு எல்.பி.ஜி. இணைப்புகள் வழங்க வேண்டியிருக்கும். ஆனால், இது சாதாரண குடிமக்களுக்கு சிலிண்டர் விநியோகத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடக் கூடாது. எனவே, மாநிலத்தின் எரிவாயு தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்த நடவடிக்கைகள் மூலம், மேற்கு வங்க மாநிலத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க மம்தா பானர்ஜி அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதையும் படிங்க: "குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?" - மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!