எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு நீடித்தால் நாடு முழுவதும் மொபைல் நெட்வொர்க் மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்படலாம் என தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பல பகுதிகளில் செல்போன் கோபுரங்கள் மற்றும் டேட்டா சென்டர்களுக்கு எல்பிஜி மூலம் இயங்கும் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுவதால், தட்டுப்பாடு தொடர்ந்தால் அவை செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது எல்பிஜி தேவையின் பெரும்பகுதியை சர்வதேச சந்தையிலிருந்து இறக்குமதி செய்வதால், உள்நாட்டு விநியோகம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மார்ச் 5, 2026 அன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வீட்டு உபயோக நுகர்வோருக்கு முன்னுரிமை கொடுக்க உத்தரவிட்டது.
இதையும் படிங்க: விவசாய நண்பன் போல் கபட நாடகம்... பிரதமரை வறுத்தெடுத்த அமைச்சர் ரகுபதி..!!
இதனால், எண்ணெய் நிறுவனங்கள் டெலிகாம் டவர் உற்பத்தி ஆலைகளுக்கு எல்பிஜி விநியோகத்தை நிறுத்தின. டிஜிட்டல் இன்ப்ராஸ்ட்ரக்சர் ப்ரொவைடர்ஸ் அசோசியேஷன் (DIPA) சார்பில் இண்டஸ் டவர்ஸ், அசெண்ட் டெலிகாம் உள்கட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் தொலைத்தொடர்பு செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளன. “டவர் உற்பத்தியில் கால்வனைசேஷன் செயல்முறைக்கு எல்பிஜி அவசியம். சில ஆலைகள் குறைந்த சுடரில் இயங்கி வருகின்றன. தொடர்ந்தால் முழு நிறுத்தம் ஏற்படும். இது புதிய டவர் பொருத்தலை தாமதப்படுத்தும்” என DIPA தெரிவித்துள்ளது.

மேலும், பல கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புற விளிம்புப் பகுதிகளில் மின்வெட்டு நேரங்களில் செல்போன் கோபுரங்கள் மற்றும் டேட்டா சென்டர்களுக்கு எல்பிஜி ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை செயலிழக்கும் பட்சத்தில் நெட்வொர்க் உபயோகம் பாதிக்கப்படும். தற்போது சேவைகள் பாதிக்கப்படவில்லை என்றாலும், நீண்டகால தட்டுப்பாடு 5ஜி விரிவாக்கம், தேசிய பாதுகாப்பு, அவசர சேவைகள், டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளை பாதிக்கும் என அச்சம் எழுந்துள்ளது.
DIPA, எல்பிஜி விநியோகத்தை டெலிகாம் ஆலைகளுக்கு விலக்கு அளிக்கவும், மின்சாரத்துக்கு முன்னுரிமை அளிக்கவும் அரசை வலியுறுத்தியுள்ளது. “டெலிகாம் நெட்வொர்க் நாட்டின் முதுகெலும்பு. இதைப் பாதுகாக்க வேண்டும்” என அழுத்தம் கொடுத்துள்ளது. இந்த தட்டுப்பாடு சமையல் எரிவாயு மட்டுமின்றி ஹோட்டல்கள், தொழில்கள் உள்ளிட்ட பல துறைகளையும் பாதித்துள்ளது. அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், டிஜிட்டல் இந்தியா இலக்கு பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: சிலிண்டர் தட்டுப்பாடு..! பதறாதீங்க... பொது மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்..!!