மகாராஷ்டிராவில் ஏற்பட்ட சோகமான சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாசிக் மாவட்டத்தின் திண்டோரி தாலுக்காவில் உள்ள இந்தூர் கிராமத்தைச் சேர்ந்த 34 வயது சுனில் தத்தாத்ரேய தர்கோடே என்பவர், தனது குடும்பத்தினருடன் சிவாஜிநகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்ச்சி முடிந்து நள்ளிரவு நேரத்தில் அவர் தனது காரில் மனைவி ரேஷ்மா (30), மகள் ராக்கி (10) மற்றும் உறவினர்களான ஆஷா அனில் தர்கோடே (32), மாதுரி (13), ஸ்ராவணி (11), ஸ்ரேயாஷ் (11), ஸ்ரிஷ்டி (14), ஸம்ருத்தி (7) ஆகியோருடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். திண்டோரி பகுதியில் செல்லும்போது, சுனில் ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி, அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய கிணற்றுக்குள் பாய்ந்து விழுந்தது.

கார் முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கியதால், உள்ளே இருந்த அனைவரும் சிக்கிக்கொண்டனர். இரவு நேரம் என்பதால் உடனடியாக உதவி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும், உள்ளூர் போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் மேலாண்மைப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கிணற்றில் நீர் நிரம்பியிருந்ததால் மீட்புப் பணிகள் மிகவும் சிரமமாக இருந்தன.
இதையும் படிங்க: மூதாட்டி கொடூரக் கொலை... பணிப் பெண்ணை தேடி மகாராஷ்டிரா விரைந்த தனிப்படை..!!
மீட்புக் குழுவினர் பல மணி நேரம் தொடர்ச்சியாக முயற்சி செய்த பிறகு, கிரேன் உதவியுடன் காரை கிணற்றில் இருந்து வெளியே இழுத்தனர். காருக்குள் இருந்த ஒன்பது பேரின் உடல்களையும் பிணமாகவே மீட்க முடிந்தது. உடல்கள் அனைத்தும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனத்தின் வேகம், சாலை நிலைமை, ஓட்டுநரின் உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் ஒரே நேரத்தில் உயிரிழந்தது அந்த கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் அளிக்க முடியாத அளவுக்கு துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.இத்தகைய விபத்துகளைத் தடுக்க, இரவு நேரப் பயணங்களின்போது வாகனங்களை மெதுவாகவும், எச்சரிக்கையுடனும் இயக்க வேண்டும் என்று போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சாலையோரங்களில் உள்ள ஆபத்தான இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
இதையும் படிங்க: திருவள்ளூரில் நேர்ந்த துயரம்... அரசு பேருந்து மீது கார் மோதி தம்பதி பலியான சோகம்..!!