டெல்லி: இந்தியாவின் தலைமையில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை (செப்டம்பர் 12) டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
2026 ஜனவரி 1ஆம் தேதி இந்தியா 4வது முறையாக பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றது. இதையடுத்து நடைபெறும் உச்சி மாநாட்டில் உலகின் முக்கிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதால், சர்வதேச அளவில் கவனம் டெல்லி மீது திரும்பியுள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதையும் படிங்க: வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

இதனிடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானும் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதனால் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், அடுத்த சில நாட்களில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தலைவர்கள் பிரிக்ஸ் மாநாட்டிற்காக ஒன்றுகூட உள்ளதாக தெரிவித்துள்ளார். உலக நலனை முன்னிறுத்தி பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த உச்சி மாநாட்டில் நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
குறிப்பாக ஈரான் தொடர்பான போர் சூழல், அதன் காரணமாக ஏற்படும் உலகளாவிய பொருளாதார தாக்கம், வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி, புதின், ஜி ஜின்பிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஒரே மேடையில் கூடுவதால், பிரிக்ஸ் மாநாடு இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக அரசியலிலும் முக்கிய திருப்பமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லி மெட்ரோவில் பிரதமர் மோடி பயணம் வைரல்! குழந்தைகளுடன் நடந்த சுவாரஸ்ய உரையாடல்!