டெல்லி: லோக்சபாவில் “வந்தே மாதரம்” பாடலின் 150ஆம் ஆண்டு கொண்டாட்ட விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸையும் நேருவையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். “1937-ல் வந்தே மாதரம் பாடலின் முக்கிய சரணங்களை காங்கிரஸ் நீக்கியது. இதுவே பிரிவினையின் விதையை விதைத்தது” என்று மோடி குற்றம் சாட்டினார்.
இதற்கு காங்கிரஸ் உடனடியாக பதிலடி கொடுத்தது. அதே நேரம், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, வெறும் நான்கு வார்த்தைகளில் பதிலளித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
வந்தே மாதரம் பாடலின் 150ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு லோக்சபாவில் 10 மணி நேர சிறப்பு விவாதம் தொடங்கியது. முதலில் பேசிய பிரதமர் மோடி, “வந்தே மாதரம் சுதந்திரப் போராட்டத்தின் மந்திரம். இது ஒரு பாடல் மட்டுமல்ல, சுதந்திரத் தாயின் பக்தி” என்று உணர்ச்சியுடன் தொடங்கினார்.
இதையும் படிங்க: ‘வந்தே மாதரம்’ 150! பார்லி.,யில் ஒருநாள் முழுக்க விவாதம்! எதிர்க்கட்சிகளை மடக்க மோடி ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’!
பின்னர், 1937-ல் காங்கிரஸ் ஆட்சியில் வந்தே மாதரம் பாடலின் முக்கிய பகுதிகளை நீக்கியதை கடுமையாக விமர்சித்தார். “இந்த முடிவு பிரிவினைக்கு வழிவகுத்தது. காங்கிரஸ் தேசியப் பாடலைத் துண்டுத் துண்டாகப் பிளந்தது” என்று மோடி குற்றம் சாட்டினார்.

இதற்கு உடனடியாக காங்கிரஸ் பதிலளித்தது. “ரவீந்திரநாத் தாகூரின் ஆலோசனையின்படி தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது. இது அனைத்து சமூகத்தினரின் உணர்வுகளை மதிக்கும் செயல்” என்று காங்கிரஸ் தெரிவித்தது. “தாகூரை அவமதித்த பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியது.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, வந்தே மாதரம் விவாதம் குறித்து கேட்கப்பட்டபோது, “பிரியங்கா பேச்சைக் கேளுங்கள்” என்று நான்கே வார்த்தைகளில் பதிலளித்து சென்றார். இந்த விவாதத்தில் வயநாடு எம்பியான பிரியங்கா காந்தி பேசுகிறார். அவரது பேச்சு அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தே மாதரம் பாடல் 1875-ல் பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் இயற்றப்பட்டது. 1882-ல் “ஆனந்தமத்” நாவலில் இடம்பெற்றது. ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார். சுதந்திரப் போராட்டத்தில் இது மிக முக்கிய முழக்கமாக இருந்தது. இந்த விவாதம், அரசியல் கட்சிகளுக்கு இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தாயின் மணிக்கொடி பாரீர்! பார்லி-யில் ஒலித்த தமிழ்!! பிரதமர் மோடி கவுரவம்!