எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாடு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புகழ்ச்சிந்தனையாகவே முடிந்தது. இஸ்ரேல்-ஹமாஸ் போரின் முதல் கட்ட போர் நிறுத்தத்தை அடையாளப்படுத்தும் இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்றறார்.
ஆனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்காதது சிறந்த உத்தியாக நிபுணர்கள் பாராட்டுகின்றனர். இல்லையெனில், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் டிரம்பின் 'நான் போர் நிறுத்தினேன்' எனும் தவறான கூற்றுகளுக்கு மோடி தர்ம சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் மற்றும் காசாவை கட்டுப்படுத்தும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த போர், அமெரிக்காவின் 20 அம்ச திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இரு தரப்பும் ஒப்புதல் அளித்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: 8 மணி நேரத்தில் உடற்கூறு ஆய்வா? EPS- க்கு பேரவையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலடி...!
எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் நடந்த உச்சி மாநாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்துல் பத்தா எல்-சிசி இணைந்து தலைமை தாங்கினர். போரில் ஈடுபட்ட இஸ்ரேல், ஹமாஸ் பங்கேற்காத நிலையில், மாநாடு போர் நிறுத்தத்தின் ஆரம்ப கட்ட அடையாள விழாவாகவே நடைபெற்றது. 20க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் நடந்த விவாதங்கள் பெரும்பாலும் டிரம்பைப் புகழ் பாடுவதாகவே இருந்தன. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், டிரம்பை 'எல்லை தாண்டிய புகழ் பெற்றவர்' எனப் பாராட்டி, 'இந்தியா-பாகிஸ்தான் போரை அவர் நிறுத்தினார், அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும்' என முகஸ்துதி செய்தார்.
இது மேடையில் இருந்தவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. ஷெரீப்பின் பேச்சை அந்நாட்டு ஊடகங்கள் 'அளவுக்கு அப்பாற்பட்டது' என விமர்சித்தன. டிரம்ப், இந்தியாவை 'சிறந்த நாடு' எனப் பாராட்டியதோடு, பின்னால் நின்ற ஷெரீப்பை சுட்டிக்காட்டி, 'இந்தியா-பாகிஸ்தான் அமைதியாக வாழும்' எனக் கூறினார்.
மாநாட்டில் பங்கேற்க மோடிக்கு டிரம்ப், எல்-சிசி ஆகியோர் அழைப்பு விடுத்தனர். ஆனால், அவர் பங்கேற்காமல், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங்-ஐ அனுப்பினார். இதை காங்கிரஸ் எம்பி சசி தரூர் உள்ளிட்டோர் விமர்சித்தனர். ஆனால், அரசியல் நிபுணர்கள் இது சரியான முடிவு என்கின்றனர்.
இந்தியா, பாகிஸ்தானுடன் 'ஆபரேஷன் சிந்தூர்' போரை 3-ஆம் நாட்டு தலையீடு இன்றி நிறுத்தியதாக உறுதியாகத் தெரிவித்து வருகிறது. பயங்கரவாதத்தை கைவிடும் வரை பாகிஸ்தானுடன் உறவு இல்லை என இந்தியா நிலைப்பாடு எடுத்துள்ளது.
மோடி பங்கேற்றிருந்தால், டிரம்பின் தவறான கூற்றுகளை அவர் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். டிரம்ப், மோடியையும் ஷெரீப்பையும் அருகருகே நிற்க வைத்து புகைப்படம் எடுக்கலாம். இது இந்தியாவின் தூதரக நிலைப்பாட்டை பாதிக்கும்.
ஏற்கனவே, ஜி7 உச்சி மாநாட்டில் டிரம்ப் மோடியை அழைத்தபோது, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் அமெரிக்காவில் இருந்ததால், குரோஷியா பயணத்தை முன்னிறுத்தி மோடி மறுத்தார். இப்போது மங்கோலியா அதிபரின் இந்தியா வருகை, மோடிக்கு வலுவான காரணத்தை அளித்துள்ளது.
சர்வதேச அரசியல் நிபுணர்கள், 'மோடியின் இந்த உத்தி, இந்தியாவின் தன்னம்பிக்கையை காட்டுகிறது. டிரம்ப்-ஷெரீப் ஒன்றாக உள்ள சூழ்நிலையில் பங்கேற்காமல் தர்ம சங்கடத்தை தவிர்த்துள்ளார் மோடி' என பாராட்டுகின்றனர். இந்த முடிவு, இந்தியாவின் வெளியுறவு கொள்கையை வலுப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காசில்லைனு செக் ரிட்டர்ன் ஆக கூடாது! விசிக நிர்வாகிகளுக்கு திருமாவளவன் கறார் கண்டிசன்!