மகாராஷ்டிரா அரசைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்று முதல்வர் விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தினார். தமிழ்நாட்டின் புதிய அரசு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில், 2026 மே 25 அன்று பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களில், குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை முழு தள்ளுபடியும், பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000 நிவாரணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் சுமார் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் எனக் கூறப்பட்டாலும், இந்த அறிவிப்பு விவசாய சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக இந்தத் திட்டம் வெளியாகியிருப்பதால், விவசாயிகள் இதை “மிகப்பெரிய ஏமாற்றம்” என விமர்சிக்கின்றனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் சுமார் 56 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்யவும், முறையாக பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கவும் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல் வழங்கியுள்ள செய்தியைத் தாங்கள் அறிவீர்களா? என்று முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய தவெக நிர்வாகிகள்... வெளுத்து வாங்கிய நயினார்..!!
விவசாயிகள் நலனை எப்படிக் காப்பது என்பதை மகாராஷ்டிர பாஜக அரசைப் பார்த்து இனியாவது கற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறினார். மாற்று சக்தி என்று வீணாக முழங்குவதைவிட மற்ற மாநிலங்களைப் பார்த்து நன்முயற்சிகளைப் பின்பற்றுங்கள் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார். உடனடியாக, தமிழக விவசாயிகளின் துயர் துடைக்கும் விதமாக, ஏற்கனவே அறிவித்த ஏமாற்றுத் தள்ளுபடியைத் திரும்பப் பெற்று, கொடுத்த வாக்குறுதிப்படி பயிர்க் கடனை முழுமையாக ரத்து செய்யுங்கள் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பேராசிரியர்கள் இன்றி அள்ளாடும் பல்கலைக்கழகங்கள்...! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!!