சுதந்திர போராட்ட காலத்தில் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிட்டெட் (AJL) நிறுவனத்தை ஜவகர்லால் நேரு தொடங்கினார். அந்த நிறுவனம் தொடங்க சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிதி பங்களிப்பு செய்தனர். இந்த நிறுவனம் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்பட பத்திரிகைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.
அதில் வந்த லாபத்தில் ஏஜேஎல் நிறுவனம் பல்வேறு மாநிலங்களில் சொத்துகள் வாங்கியது. காலப்போக்கில் ஏஜேஎல் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பத்திரிகைகள் 2008ல் நிறுத்தப்பட்டது.

பத்திரிகை தொடர்ந்து நடைபெற காங்கிரஸ் கட்சி ஏஜெஎல் நிறுவனத்துக்கு 90.25 கோடி ரூபாய் கடன் கொடுத்தது. கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத ஏஜெஎல் நிறுவனம், அதன் பங்குகளை யங் இந்தியன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துக்கு மாற்றியது. யங் இந்தியன் நிறுவன இயக்குநர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி பெயர்களில் தலா 38 சதவீத பங்குகளும், துபே, சாம் பிட்ரோடா, மோதிலால் வோரா போன்ற காங்கிரஸ் தலைவர்களில் பெயர்களில் மீதி பங்குகளும் மாற்றப்பட்டன.
ஏஜெஎல் நிறுவனத்துக்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அபகரிக்கவே, யங் இந்தியா நிறுவனத்துக்கு பங்குகள் மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு இது மட்டும் தான் கரெக்ட்டா வரும்.. விளாசிய ராகுல் காந்தி..!
இதில் சட்ட விரோத பண பரிமாற்ற குற்றங்கள் நடைபெற்றதாக அமலாக்க துறையும், சிபிஐயும் வழக்கு தொடர்ந்தன. டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூலை 2ம் தேதி நடந்த விசாரணையின் போது நேஷனல் ஹெரால்டு வழக்கு பண பரிமாற்ற தவறுகளுக்கு மிகச் சிறந்த உதாரணம் என அமலாக்க துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து நீதிபதி விஷால் கோக்னே முன்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ கூறியதாவது: இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ள சோனியாவும், ராகுலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை கட்டுப்படுத்தினர். காங்கிரஸ் கமிட்டி மூலம் 90.25 கோடி ரூபாய் கடன் ஏஜெஎல் நிறுவனத்துக்கு செல்வது அவர்களுக்கு தெரியும். அந்தக் கடனைக் கொடுத்ததன் நோக்கம் ஏஜெஎல் நிறுவனத்துக்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாயை அடைவதுதான்.
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் யங் இந்தியன் நிறுவனத்துக்கு பொறுப்பேற்று இருந்தனர். அவர்களுடைய சம்மதம் இல்லாமல் போலி பரிவர்த்தனை நடத்தப்பட்டு இருக்க முடியாது. சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்வர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஒப்புதலுடன் ஏஜெஎல் நிறுவனத்துக்கு சொந்தமான 2 ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துகளை கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள துபே யங் இந்தியன் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர். அவர் தனது 550 பங்குகளை சோனியாவுக்கு மாற்றித் தந்துள்ளார். துபே காந்தி குடும்பத்தின் கைப்பாவை.
அவர்கள் சொல்வதை செய்பவர். அவருடைய ஒத்துழைப்பு இல்லாமல் இந்த போலி பரிவர்த்தனை நடந்திருக்க முடியாது.குற்றம் சுமத்தப்பட்டுள்ள சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவருக்கும் எதிரான பண மோசடி குற்றத்துக்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம் என்பதை நீதிமன்றம் கவனத்தில்கொள்ள வேண்டும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ கூறினார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இதையும் படிங்க: அள்ளி வீசிய அவதூறுகள்.. டோட்டல் சரணடைதல் வரை..! எதிர்க்கட்சிகளின் மன்னிப்பு நாடகம்..!