மகாராஷ்டிராவின் மகாயுதி அரசு இபோது சிக்கலில் உள்ளது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரண்டு அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். 30 வருட பழமையான வீட்டுவசதி மோசடி வழக்கில் வேளாண் அமைச்சர் மாணிக்ராவ் கோகடே குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சர்பஞ்ச் கொலை வழக்கிலும் தனஞ்சய் முண்டே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு நடந்துள்ளன. இதற்கிடையே எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி இரு அமைச்சர்களையும் ராஜினாமா செய்யக் கோரியுள்ளது. இது முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு ஒரு பெரிய சவால்.

30 வருட பழமையான வீட்டு மோசடி வழக்கில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிரா வேளாண் அமைச்சருமான மாணிக்ராவ் கோகடே, நாசிக் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவரது அமைச்சர் பதவி, சட்டமன்ற உறுப்பினர் பதவி மீது நெருக்கடிகள் சூழ்ந்து வருகின்றன.
இதையும் படிங்க: 117/117 கேட்கும் விஜய்..! 60 ஐ தாண்டாத எடப்பாடி.. சேருமா? சேராதா?
முன்னதாக, பீட் மாவட்டத்தில் ஒரு சர்பஞ்ச் கொலை வழக்கில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான தனஞ்சய் முண்டேவும் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கில் முண்டேவின் நெருங்கிய கூட்டாளி வால்மிக் கரட் கைது செய்யப்பட்டார்.
இந்த இரண்டு சம்பவங்களாலும், மகாராஷ்டிராவின் மகாயுதி அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் அஜித் பவாரின் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரண்டு அமைச்சர்கள் சர்ச்சைகளில் சிக்கியதால் அரசுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி இரு அமைச்சர்களையும் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ் வர்தன், ''முண்டே,கோகடேவை அமைச்சரவையில் தக்கவைத்துக் கொள்வதில் எந்த நியாயமும் இல்லை. நாங்கள் அவரது ராஜினாமாவை கோருகிறோம். இரு அமைச்சர்கள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்'' என்று அவர் கூறியுள்ளார்.
பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த பாஜக அமைச்சர், ''கோகட்டேவுக்கு என்ன நடக்கும்? இந்த முடிவை முதல்வர் ஃபட்னாவிஸ் எடுக்க வேண்டும். எந்த அமைச்சரவை சக ஊழியரைப் பற்றியும் கருத்து தெரிவிப்பது பொருத்தமாக இருக்காது. இருப்பினும், அவர்கள் பதவியில் நீடித்தால் அரசின் பெயர் கெட்டு விடும். நாங்கள் ஒரு முத்தரப்பு கூட்டணி என்பதால், ஒவ்வொரு முடிவும் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து அவர்களின் ஒப்புதலுடன் எடுக்கப்பட வேண்டும். இறுதியில் சட்டம் அதன் வேலையைச் செய்யும்'' என எச்சரித்துள்ளார்.
சட்டமன்றத்தின் முன்னாள் முதன்மைச் செயலாளர் அனந்த் காலே இதுகுறித்து பேசுகையில், ''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருக்கு தண்டனை வழங்குவது ஒரு தீவிரமான விஷயம்.தண்டனை பெற்ற நபர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தண்டனைக்கு தடை விதித்தால், உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படுவதைத் தவிர்க்கலாம். இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், சிக்கல் ஏற்படக்கூடும்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கோகடே தனக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாகக் கூறியுள்ளார். ''நீதிமன்றம் என்னை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த முடிவை நான் உயர் நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன்'' எனத் தெரிவித்துள்ளார். சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் பதவியில் இருக்க முடியாது.
இந்த வழக்கு 1997 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் துக்காராம் டிகோல் தாக்கல் செய்த மனுவுடன் தொடர்புடையது. முதலமைச்சரின் குறைந்த வருமானப் பிரிவினருக்கான 10% விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் வீடுகளைப் பெறுவதற்காக கோகட்டே மற்றும் அவரது சகோதரர் விஜய் ஆகியோர் ஆவணங்களை மோசடி செய்ததாக டிகோல் குற்றம் சாட்டியிருந்தார். விசாரணை மற்றும் தண்டனையைத் தொடர்ந்து, கோகேட் சகோதரர்கள் மீது ஐபிசி பிரிவுகள் 420 (மோசடி), 465 (போலி ஆவணங்களைத் தயாரித்தல்), 471 மற்றும் 474 (உண்மையை மறைத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சின்னாரில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணிக்ராவ் கோகடே, காங்கிரஸில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1999 ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து பிரிந்து சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கியபோது, கோகடே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 
ஆனால் சட்டமன்றத் தேர்தலின் போது அவருக்கு சீட் கிடைக்காததால், அவர் சிவசேனாவுக்குச் சென்றார். 1999 ஆம் ஆண்டு நாசிக் மாவட்டத்தின் சின்னார் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சிவசேனா அவருக்கு சீட் கொடுத்தது. அவர் தேர்தலில் வெற்றி பெற்றார். 2009 ஆம் ஆண்டு, நாராயண் ரானேவுடன் காங்கிரஸில் இணைந்தார். 2009 ஆம் ஆண்டு, அவர் சின்னார் தொகுதியிலிருந்து மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2014 ஆம் ஆண்டு, அவர் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார். 2019 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து, நான்காவது முறையாக சின்னார் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இப்போது கோகடே அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐந்தாவது முறையாக எம்.எல்.ஏ.வானார்.
இதையும் படிங்க: டிரம்பிற்கு எதிராக பேசினால் 5 லட்சம் கோடி.. உக்ரைன் அதிபரை மிரட்டும் அமெரிக்கா..!