சென்னை: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து ஆன்மிகப் பயணமாக அந்நாட்டுக்குச் சென்ற 49 தமிழர்களின் நிலை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை தொடர்புகொள்ள முடியாததால், உறவினர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மகாதேவ் கைலாஷ் ஆன்மிக சுற்றுலா ஏஜென்சி மூலம் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 49 பேர் நேபாளத்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். சென்னை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த குழுவில் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இவர்களுடன் ஏஜென்சி நிறுவன உரிமையாளரின் மகனும் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குழுவினர் ஆகஸ்ட் 27-ம் தேதி தமிழகம் திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால், புதன்கிழமை நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் நிலைமையை முற்றிலும் மாற்றியுள்ளது. வெள்ளம் ஏற்பட்ட நாளில், விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியுரிமை அலுவலகத்துக்குச் சென்றதாக குழுவினரிடம் இருந்து கடைசியாக தகவல் கிடைத்ததாக ஏஜென்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம்! இந்தியாவுக்கும் காத்திருக்கும் அடுத்த ஆபத்து! பீகார், உ.பி.க்கு எச்சரிக்கை!
அதன்பிறகு 49 பேருடனும் தொடர்பு ஏற்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது.

இந்த குழுவில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தீனதயால், ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த விக்ரமன் மற்றும் மஞ்சுளா உள்ளிட்டோர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டையைச் சேர்ந்த 6 பேரும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 6 பேரும் குழுவில் இடம்பெற்றிருந்தனர். நாமக்கல்லைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களில் இருந்து 5 பேரும் இந்த பயணத்தில் சென்றதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, தேனியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் இந்த குழுவில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களைப் பற்றிய தகவல் கிடைக்காததால் குடும்பத்தினர் தவிப்பில் உள்ளனர்.
இதனிடையே, 49 பேரின் விவரங்கள் மற்றும் அவர்களுடன் கடைசியாக எப்போது தொடர்பு ஏற்பட்டது உள்ளிட்ட தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மகாதேவ் கைலாஷ் ஏஜென்சி அலுவலகத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேபாளத்தில் வெள்ளத்தால் பல சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ள நிலையில், பல பகுதிகளுடனான போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காணாமல் போனவர்களை உடனடியாக தொடர்புகொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
49 தமிழர்களின் தற்போதைய நிலை குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகாத நிலையில், அவர்களை பாதுகாப்பாக கண்டறிந்து மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்!