மத்திய கிழக்கில் (மேற்காசியா) அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு, வரும் நாட்களில் தாக்குதல்கள் இதைவிட மிக அதிகமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
நெதன்யாஹு தனது வீடியோ பதிவில் கூறியதாவது: "ஈரானின் பயங்கரவாத ஆட்சியின் ஆயிரக்கணக்கான இலக்குகளை அடுத்தடுத்து தாக்குவோம். இது ஈரான் மக்களுக்கு ஒரு தலைமுறைக்கு ஒருமுறை வரும் வாய்ப்பு. கொடுங்கோன்மை சங்கிலியில் இருந்து விடுதலை பெற இப்போதுதான் சரியான தருணம். ஈரான் மக்கள் தெருவுக்கு வாருங்கள். உங்கள் தியாகங்கள், துன்பங்கள் வீணாகாது. உங்களுக்கு உதவி இப்போது வந்துவிட்டது."
மேலும், "ஈரான் மக்கள், பாரசீகர்கள், குர்திஷ்கள், அஜர்பைஜானியர்கள், அஹவாசிகள், பலூச்சிகள் உள்ளிட்ட அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து தங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டிய நேரம் இது" என்று அழைப்பு விடுத்துள்ளார். இது ஈரான் ஆட்சியை மக்கள் எழுச்சி மூலம் வீழ்த்த வேண்டும் என்று நேரடியாக தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: சீனாவை நம்பினா இப்பிடிதான்? ஈரானுக்கு பலத்த அடி விழ காரணம்?! ஏர் டிபென்ஸ் சிஸ்டம் பெயிலியர்?!!
இஸ்ரேலின் இந்த அறிவிப்பு போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் பதிலடி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. குவைத், யுஏஇ, சைப்ரஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க-இஸ்ரேல் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. துபாய், அபுதாபி, தோஹா நகரங்களில் ஏவுகணை வெடிப்பு சத்தங்கள் அதிர்கின்றன. விமான நிலையங்கள் மூடப்பட்டு, சர்வதேச போக்குவரத்து முடங்கியுள்ளது.

இந்த சூழலில் ஈரான் மக்களை எழுச்சிக்கு அழைப்பு விடுத்துள்ள நெதன்யாஹுவின் பேச்சு, போரை உள்நாட்டு கிளர்ச்சியாக மாற்றும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஈரானில் சில பகுதிகளில் (குர்திஸ்தான், பலூச்சிஸ்தான்) ஏற்கனவே அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரேலின் இந்த அழைப்பு அவற்றை மேலும் தீவிரப்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
மேற்காசியாவில் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர் – குறிப்பாக யுஏஇயில் 35.5 லட்சம். போர் தீவிரமடைந்தால் அவர்களின் பாதுகாப்பு, திரும்பி வருதல் பெரும் சவாலாக உள்ளது. இந்தியா ஏற்கனவே அமைதி வலியுறுத்தி வருகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான CCS கூட்டத்தில் இந்தியர்களின் நலன் முதன்மை என உறுதிப்படுத்தப்பட்டது. போர் நிறுத்தம், உரையாடல் மூலம் தீர்வு காண வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் நெதன்யாஹுவின் இந்த அறிவிப்பு போரை மேலும் நீட்டிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: ஈரான் உச்ச தலைவர் கமேனி கதை முடித்தது எப்படி? ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கிய சிஐஏ!! பக்கா ஸ்கெட்ச்!