சமூக ஊடகங்களின் சுதந்திரமான ஓட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய புதிய திருத்தங்களை முன்மொழிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை புகார்கள் வரும் பட்சத்தில் மட்டுமே குறிப்பிட்ட பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், இனி எந்தவிதமான முகாந்திரமும் அல்லது புகாரும் இல்லாமலேயே, சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளைத் தாமாக முன்வந்து ஆய்வு செய்யவும், அவற்றை உடனடியாக நீக்கவும் உத்தரவிடும் அதிகாரத்தை இந்த புதிய சட்டத் திருத்தம் அரசுக்கு வழங்குகிறது. இந்த நடவடிக்கையானது ஊடக சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதல் என ஜனநாயக ஆர்வலர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

இந்த விதிமுறையின் வீச்சு மிகவும் ஆழமானது என்பதுதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது; இது வெறும் பெரிய செய்தி நிறுவனங்களை மட்டும் குறிவைக்கவில்லை. மாறாக, சமூக ஊடகங்களில் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யும் இன்ஃப்ளூயன்ஸர்கள் மற்றும் செய்திகளைச் சாதாரணத் தளங்களில் பகிரும் தனிநபர்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எக்ஸ் (X), ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பதிவிடப்படும் ஒவ்வொரு வரியும் அரசின் நுணுக்கமான கண்காணிப்பு வளையத்திற்குள் (Surveillance) கொண்டு வரப்படவுள்ளது.
இதையும் படிங்க: ரேஷன் கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகம்..!! மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!
அரசியல் வட்டாரங்களில் இந்த விவகாரம் அனலைக் கிளப்பியுள்ள நிலையில், இது 'டிஜிட்டல் எமர்ஜென்சி' போன்ற சூழலை உருவாக்கும் என விமர்சகர்கள் 'ஆப் தி ரெக்கார்ட்' ஆகப் புலம்பி வருகின்றனர். செய்திகளின் நம்பகத்தன்மையைச் சோதிப்பதாகக் கூறிக்கொண்டு, அரசுக்கு எதிரான விமர்சனங்களை நசுக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. ஒரு தனிமனிதன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிரும் செய்தி கூட அரசின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, 'சரியில்லை' எனத் தோன்றினால் எவ்வித விளக்கமும் இன்றி நீக்கப்படலாம் என்பது பேச்சுரிமையின் மீதான கடும் தணிக்கையாகவே (Censorship) கருதப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது மக்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளதோடு, சட்ட ரீதியான சவால்களையும் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இன்ஸ்டா, ஃபேஸ்புக்கில் இனி NO FAKE அக்கவுண்ட்..!! அதிரடி நடவடிக்கை எடுக்கப்போகும் மத்திய அரசு..!!