மத்திய அரசு, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) தொடர்ந்து விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதில் இட்லி, தோசை, சாம்பார், சட்னி போன்ற அன்றாட உணவு வகைகளும் அடங்கும். வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள புதிய ஜிஎஸ்டி விதிமுறைகளின்படி, அத்தியாவசியப் பொருட்களுக்கு 5% வரியும், அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு 18% வரியும், ஆடம்பரப் பொருட்களுக்கு 40% வரியும் விதிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

முன்னதாக, ஜிஎஸ்டி விகிதங்கள் 0%, 5%, 12%, 18%, மற்றும் 28% எனப் பிரிக்கப்பட்டிருந்தன. தற்போது, 12% மற்றும் 28% விகிதங்கள் நீக்கப்பட்டு, இரண்டு அடுக்கு விகிதங்களான 5% மற்றும் 18% மட்டுமே பயன்படுத்தப்படும். ஆடம்பரப் பொருட்களுக்கு 40% வரி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம், வரி அமைப்பை எளிமையாக்குவதோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: பாராட்டு மடலில் தமிழக நிதி கேட்டு ஒருவரை கூட எழுதலையே? இபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி
இந்தப் புதிய வரி மாற்றங்களால், அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 93,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படலாம் எனவும், ஆனால் ஆடம்பரப் பொருட்களுக்கான 40% வரியால் 45,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்தம், பொதுமக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா போன்ற இந்திய உணவுகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இட்லி மற்றும் தோசை மீதான 5% ஜிஎஸ்டி வரி தொடரும் என மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ரொட்டி, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த முடிவு வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனால், பரோட்டா, பராத்தா போன்றவற்றின் விலை 5-12% குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இட்லி மற்றும் தோசை உள்ளிட்ட உணவுகள் உணவகங்களில் 5% ஜிஎஸ்டியும், பேக் செய்யப்பட்ட பேட்டர் 18% ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது. இது, அத்தியாவசிய உணவுகளுக்கு சமமான நடவடிக்கை இல்லை என உணவக உரிமையாளர்கள் விமர்சிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் இட்லி, தோசை ஆகியவை பல குடும்பங்களின் அன்றாட உணவாக உள்ளன. “வட இந்தியாவில் சப்பாத்தி அத்தியாவசிய உணவாகக் கருதப்படுவது போல, தென்னிந்தியாவில் இட்லி, தோசை உள்ளன. ஆனால், இவற்றுக்கு வரி விதிப்பது நியாயமற்றது,” என சென்னையைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

தென்இந்திய உணவுக்கு மட்டும் ஜிஎஸ்டியா? என்று தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் இது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, சர்ச்சையை கிளப்பி உள்ளது. தென் இந்திய உணவு வகைகளை குறிவைத்து ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறதா? என்று வலைதளங்களில் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மத்திய அரசின் இந்த முடிவு சரியா? என கேள்வி எழுப்பி உள்ளனர். பொதுமக்களின் தினசரி உணவின் மீதான வரி விதிப்பில் பாரபட்சம் காட்டியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பேக் செய்யப்பட்ட இட்லி, தோசை பேட்டருக்கு 18% வரி விதிக்கப்படுவது சிறு உணவகங்களுக்கு சவாலாக உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவு, வரி வகைப்பாட்டில் உள்ள சிக்கல்களை நீக்கி, நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கம் கொண்டது. இருப்பினும், இட்லி, தோசை மீதான வரி தொடர்வது தென்னிந்திய உணவு கலாசாரத்தை புறக்கணிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. CBIC, இது குறித்து மேலும் தெளிவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #GST 2.0: சிறு சலுகை மக்கள் வேதனையை அடக்காது..! செல்வப்பெருந்தகை கருத்து..!