ஸ்டாக்ஹோம்: அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோ தனக்கு கிடைத்த பதக்கத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு வழங்கியது உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், நோபல் அமைப்பு இப்போது அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.
நோபல் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “நோபல் பரிசு என்பது ஒருவருடன் பிரிக்க முடியாதது. பரிசு பெற்றவர் வரலாற்றில் என்றென்றும் நோபல் வெற்றியாளராகவே பதிவாகி விடுவார். ஆனால் பதக்கம் (medal), சான்றிதழ், பரிசுத் தொகை ஆகியவற்றை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எந்த கட்டுப்பாடும் இல்லை.
பரிசு பெற்றவர் தன்னுடைய விருப்பப்படி பதக்கத்தை வைத்திருக்கலாம், யாருக்காவது கொடுக்கலாம், விற்கலாம், நன்கொடையாக அளிக்கலாம் – இதில் முழு சுதந்திரம் உண்டு. ஆனால் பரிசு பெற்றவர் என்ற அந்தஸ்து, பெயர், வரலாற்று பதிவு ஆகியவை எந்த சூழலிலும் மாற்றப்படாது. இந்த பரிசை வேறொருவருக்கு மாற்ற முடியாது, ரத்து செய்ய முடியாது, பகிர்ந்து கொள்ள முடியாது. இது இறுதியானது மற்றும் நிரந்தரமானது.”
இதையும் படிங்க: நோபல் பரிசு எனக்குத்தான்!! பூரித்துப்போன அதிபர் ட்ரம்ப்! நீண்ட நாள் கனவு நிறைவேறியது!

மரியா கொரினா மச்சாடோ 2025-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர். வெனிசுலாவில் மிக்யூல் மடுரோ அரசுக்கு எதிரான போராட்டங்களுக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் அவர் இந்த விருதைப் பெற்றார். பரிசு அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே, அவர் தனது பதக்கத்தை டிரம்புக்கு அளித்தது உலக அரசியலில் பெரும் பேசுபொருளானது.
பலர் “நோபல் பரிசு டிரம்புக்கு சென்றுவிட்டதா?” என்று கேள்வி எழுப்பிய நிலையில், நோபல் குழு இப்போது தெளிவாகக் கூறியுள்ளது: பதக்கம் போனாலும், நோபல் வென்றவர் என்ற பெருமை மரியா கொரினாவுடனேயே இருக்கும்!
இந்த விளக்கம் சர்ச்சையை ஓரளவு தணித்தாலும், சமூக வலைதளங்களில் “நோபல் பதக்கம் டிரம்ப் கையில்!” என்ற விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இதையும் படிங்க: நோபல் பரிசை ட்ரம்பிடமே கொடுத்துவிட்டேன்!! மச்சாடோ அதிரடி அறிவிப்பு! வெடிக்கும் சர்ச்சை!