ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் மக்கள் வசிக்கும் இடங்களிலும் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசியது. ஆனால், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை ஏவுகணை பாதுகாப்பு கவச வாகனம் மூலம் இந்தியா முறியடித்தது இதையடுத்து, தொடர்ந்து பல ஆலோசனை கூட்டங்கள், முப்படை தளபதிகளுடன் கூட்டம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ அமைச்சர், உள்துறை அமைச்சர் என பல கூட்டங்களில் பங்கேற்று, பாகிஸ்தான் தாக்குதலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதித்தார் மோடி.
இதையும் படிங்க: இந்திய ராணுவத்தை அவமதித்தால்.. வானதி சீனிவாசன் விடுக்கும் எச்சரிக்கை..!

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்திய ராணுவம் லாகூர், கராச்சி நகரங்களில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்ட நிலையில், அமெரிக்கா எடுத்த சமரச முயற்சிகளால், இந்திய, பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் போனில் பேச்சு நடத்தினர்.
பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போர் நிறுத்தம் நேற்று மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்தது. இந்த நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பல ரகசிய தகவல்கள் வெளியாகி உள்ளது. பஹல்காம் படுகொலைகளுக்கு பின், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை அழிக்க முடிவெடுத்த பிரதமர் மோடி. இதற்கு ஆப்பரேஷன் சிந்துார் எனவும் பெயரிட்டார். ஆனால், இந்த ஆப்பரேஷன் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையில் உள்ள சக அமைச்சர்களுக்கு கூட இதுகுறித்து பிரதமர் சொல்லவே இல்லை.

பாதுகாப்பு குறித்த அமைச்சரவைக் குழுவில் பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உள்ளனர். ஆனால் யார் யாருக்கு இந்த விஷயம் தெரியும் என்றால், இவர்களில் அமித் ஷா, ஜெய்சங்கர் மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு மட்டும் இந்த ஆப்பரேஷன் குறித்து தெரியும். அதுவும் என்ன செய்ய போகின்றனர் என்பது குறித்து இந்த அமைச்சர்களுக்கு முழுமையாக தெரியாதாது என கூறப்படுகின்றது.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும், முப்படை தளபதிகளுக்கு மட்டுமே முழு விபரங்கள் தெரியுமாம்; அவ்வளவு ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாம், ஆப்பரேஷன் சிந்துார். இதற்கிடையே இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்ட போது ஒருபக்கம் ஆலோசனைக் கூட்டங்கள், இன்னொரு பக்கம் உலக தலைவர்களுடன் போனில் பேச்சு என, நாள் முழுதும் பிரதமர் பிஸியாகவே இருந்தார். இந்த காலகட்டத்தில், அவர் அதிகம் துாங்கவே இல்லை. அதிகபட்சமாக இரண்டு மணி நேரம்தான் மோடி துாங்கியிருப்பார் என்கின்றனர், பிரதமருக்கு நெருக்கமானவர்கள்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு அடுத்த அடி.. மருந்து வர்த்தகம் குளோஸ்.. ஏற்றுமதியை நிறுத்தியது தமிழகம்..!