மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள தரவுகளின்படி, சென்ற நவம்பர் மாதத்திற்கான மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல், ₹1 லட்சத்து 70 ஆயிரத்து 276 கோடி ரூபாயாகப் பதிவாகி, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் பதிவான ₹1 லட்சத்தி 69 ஆயிரத்து 16 கோடி ரூபாயை விட, நடப்பாண்டில் 0.7 சதவீதம் இந்தக் கூட்டுத் தொகை சற்று அதிகரித்துள்ளது. மொத்த வசூலில், உள்நாட்டு வருவாயாக ₹1 லட்சத்தி 24 ஆயிரத்து 300 கோடி ரூபாயும், இறக்குமதி வருவாயாக ₹45 ஆயிரத்து 976 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது.
ஆனால், கடந்த ஆண்டு நவம்பரில் ₹1 லட்சத்தி 27 ஆயிரத்து 281 கோடியாக இருந்த மொத்த உள்நாட்டு வருவாய், நிகழாண்டு நவம்பரில் 2.3 சதவீதம் சரிந்து, ₹1 லட்சத்தி 24 ஆயிரம் கோடியாகச் சரிந்துள்ளது. இந்த உள்நாட்டு வரி வருவாயின் சரிவுக்கு முக்கியக் காரணமாக, கடந்த செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்த 375 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. உள்நாட்டு வரி வருவாய் குறைந்ததே, ஒட்டுமொத்த வளர்ச்சியின் சரிவுக்கு முக்கியக் காரணியாக அமைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம் மொத்த வளர்ச்சியிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வசூல் 10.20 சதவீதம் அதிகரித்து, ₹45 ஆயிரத்து 976 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், வரி செலுத்துவோருக்கு அளிக்கப்பட்ட திரும்பப் பெறும் தொகையும் (Refund) சற்றுக் குறைந்துள்ளது. ஒரு பாசிட்டிவ் சிக்னல். கடந்த ஆண்டு நவம்பரில் ₹18 ஆயிரத்து 954 கோடி ரூபாய் திரும்ப அளிக்கப்பட்டது. நிகழாண்டு நவம்பரில் அது 4 சதவீதம் சரிந்து, ₹18 ஆயிரத்து 196 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதையும் படிங்க: இனி இது இல்லனா வாட்ஸ் அப் யூஸ் பண்ண முடியாது..!! மத்திய அரசு அதிரடி..!!
திருப்பியளிக்கப்பட்ட (Refund) தொகையைக் கழித்த பின்னர், நிகழாண்டு நவம்பரில் மொத்த நிகர ஜிஎஸ்டி வருவாயாக ₹1 லட்சத்தி 52 ஆயிரத்து 079 கோடி வசூலானது. இது கடந்த ஆண்டு நவம்பர் நிகர ஜிஎஸ்டியுடன் ஒப்பிடுகையில் 1.3 சதவீதம் அதிகமாகும் என்பது மத்திய அரசின் தரப்பின் வாதமாக அமைந்துள்ளது.
இந்தியா முழுவதும் மொத்த ஜிஎஸ்டி வசூல் உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்தின் ஜிஎஸ்டி வசூல் கடந்த மாதம் நான்கு சதவீதம் குறைந்து ₹3,764 கோடி ரூபாயாகப் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவின் அதிவேக வளர்ச்சி..!! 2030க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கு..!! மத்திய அரசின் சூப்பர் தகவல்..!!