தெலங்கானா சட்டசபையில் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு மற்றும் பாசனத் திட்டங்கள் தொடர்பான விவாதத்தின் போது முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசிய சர்ச்சைக்குரிய வார்த்தைகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தனது அரசின் மீதும் விவசாயிகள் மீதும் உள்ள அர்ப்பணிப்பை கேள்வி எழுப்புபவர்களின் "நாக்கை வெட்டுவேன்" என்று அவர் கூறியது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த பேச்சு ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சட்டசபையில் நடந்த விவாதத்தில் ரேவந்த் ரெட்டி, "தெலங்கானா மாநிலம் மற்றும் அதன் விவசாயிகள் மீது எங்களுக்கு இருக்கும் அக்கறைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், அவர்களை நாங்கள் தோலுரிப்போம் என்று அவர் (முன்னாள் முதல்வர் கே.சி.ஆர்) கூறினார்.
இதையும் படிங்க: கோவை மக்களே..!! வரப்போகுது போகி பண்டிகை..!! 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கபோகுதாம்..!!
ஆனால் நாங்கள் அவர்களைத் தோலுரிப்பது மட்டுமல்ல, அவர்களது நாக்கையும் சேர்த்து வெட்டுவோம். நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம், எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; ஆனால் எங்கள் அர்ப்பணிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தால், எங்களின் விசுவாசமானது உங்கள் நாக்கை வெட்டிவிடும்" என்று கூறினார். இந்த வார்த்தைகள் வன்முறையைத் தூண்டுவதாக உள்ளதால் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
மேலும், "சபாநாயகர் அவர்களே, இந்தப் பேச்சை நீங்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கலாம். ஆனால் பொதுமக்களின் மனதில் இதைப் பதியவைப்பதற்காக நான் இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறேன்.
பத்து வருடங்களாக நீங்கள் எதுவுமே செய்யவில்லை, ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர் கொண்டு வருவதற்கான அனுமதியைப் பெற நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எங்களை ஏன் அவமானப்படுத்த முயல்கிறீர்கள்?" என்றும் அவர் பேசினார்.

முன்னாள் முதல்வர் கே.சி.ஆர் உடன் தொடர்புடைய இருவர் குறித்தும் அவையில் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சு சட்டசபை அவையின் கண்ணியத்தை குறைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சை பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சி "மலிவானது" என்று கண்டித்துள்ளது. சட்டசபை மரபுகளுக்கு எதிரான இந்த வார்த்தைகளை எதிர்த்து பி.ஆர்.எஸ் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறினர். அதேபோல, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இதை கடுமையாக கண்டித்துள்ளது.
பாஜக தேசிய தலைமை தனது எக்ஸ் பக்கத்தில், "காங்கிரஸ் தெலங்கானா சட்டமன்றத்தை ஒரு தெரு முனையாக மாற்றிவிட்டது. தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அனைத்து ஜனநாயக வரம்புகளையும் மீறி, சபையிலேயே மூத்த தலைவர்களான கே.டி. ராமாராவ் மற்றும் ஹரீஷ் ராவ் ஆகியோருக்கு எதிராகத் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியுள்ளார்.
இது ஒரு தற்செயலான தவறு அல்ல. இது விரக்தி, ஆணவம் மற்றும் சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றின் முழுமையான வெளிப்பாடு. இதுதான் இந்திய தேசிய காங்கிரஸின் உண்மையான முகம். அங்கு கண்ணியம், ஒழுக்கம் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அறவே இடம் என்பது இல்லை. ராகுல் காந்தியும், காங்கிரஸ் அமைப்பும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நிறுவனங்களை மீண்டும் மீண்டும் அவமதிப்பதில் ஆச்சரியமில்லை" என்று பதிவிட்டுள்ளது.
பி.ஆர்.எஸ் தலைவர் தாசோஜு ஸ்ரவன் குமார் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலையிட வேண்டும் என்று கூறியுள்ளார். ரேவந்த் ரெட்டியின் பேச்சு சட்டசபை அவையின் கண்ணியத்தை குறைப்பதாகவும், ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த சம்பவம் தெலங்கானா அரசியலில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: கணக்கு இடிக்குது..! ரூ.3000 பத்தாது... 8 ஆயிரம் குடுங்க.. பாஜக செய்தி தொடர்பாளர் வலியுறுத்தல்..!