தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகி, வரும் ஜனவரி 14-ம் தேதி உற்சாகத்துடன் கொண்டாடப்படவுள்ளது. "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்ற பழமொழியை உணர்த்தும் இந்நாளில், வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றும் வழக்கம் உள்ளது. எனினும், இத்தகைய கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்க, கோவை மாநகராட்சி சிறப்பு சேகரிப்பு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது.

போகி பண்டிகை, பொங்கலுக்கு முந்தைய நாளான மார்கழியின் இறுதி நாளில் கொண்டாடப்படுகிறது. இதில், பழைய உடைகள், தேவையற்ற பொருட்கள் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்துவதன் மூலம், எதிர்மறை எண்ணங்கள், தீய பழக்கங்கள் மற்றும் கசப்பான நினைவுகளை நீக்கி, புதிய தொடக்கத்தை வரவேற்கும் அர்த்தம் உள்ளது.
இதையும் படிங்க: கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம்... துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்து சிறப்பிப்பு...!
பண்டைய காலத்தில் இது 'இந்திர விழா' என அழைக்கப்பட்டது. மழை மற்றும் செல்வத்தைத் தரும் இந்திரனுக்கு நன்றி செலுத்தும் விழாவாக இருந்தது. விவசாயிகளுக்கு மழை முதன்மையானது என்பதால், இந்நாளை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். பொங்கலை வரவேற்கும் விதமாக, வீடுகளின் வாசல்களில் காப்புக்கட்டுதல் முறை பின்பற்றப்படுகிறது. இதில் வேப்பிலை, ஆவாரம்பூ மற்றும் சிறுபீளை (பூளைப்பூ) ஆகியவற்றை கொத்தாகக் கட்டி, வீட்டுக் கூரை அல்லது நிலைக்கதவுகளில் சொருகுவார்கள். இது கிருமி நாசினியாகவும், வீட்டுக்குப் பாதுகாப்பு அளிக்கும் குறியீடாகவும் நம்பப்படுகிறது.
இந்நாளில் பலரும் ஒரே சமயத்தில் பழைய பொருட்களை அகற்றுவதால், கழிவுகள் அதிகமாகும். இதனால் ஏற்படும் மாசுபாட்டைத் தடுக்க, கோயம்புத்தூர் மாநகராட்சி ஜனவரி 10, 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெரிய அளவிலான வீட்டு கழிவு சேகரிப்பு சிறப்பு முகாம்களை நடத்துகிறது. மாநகராட்சி அறிவிப்பின்படி, பழைய படுக்கைகள், சோபாக்கள், மெத்தைகள், மேஜைகள், நாற்காலிகள் உள்ளிட்ட பெரிய கழிவுகளை பொதுமக்கள் வார்டு வாரியாக அறிவிக்கப்பட்ட சேகரிப்பு இடங்களுக்கு கொண்டு வந்து ஒப்படைக்கலாம்.
இந்த முகாம்களில், கழிவுகளை தெருவோரம் அல்லது காலி இடங்களில் வீச வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வார்டு அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்கள் சேகரிப்பு மையங்களாகச் செயல்படும்.

மேலும் விவரங்களுக்கு, சம்பந்தப்பட்ட வார்டு சுகாதார மேற்பார்வையாளரைத் தொடர்பு கொள்ளலாம். சுத்தமான கோவையை உருவாக்கும் இம்முயற்சிக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. தொடர்புக்கு: வடக்கு மண்டலம் - 89259 75980, மேற்கு மண்டலம் - 89259 75981, மத்திய மண்டலம் - 89259 75982, தெற்கு மண்டலம் - 90430 66114, கிழக்கு மண்டலம் - 89258 40945. இணையதளம்: www.ccmc.gov.in.
இதையும் படிங்க: பயன்பாட்டுக்கு வந்தது செம்மொழிப் பூங்கா..!! கோவை மக்கள் ஹேப்பி அண்ணாச்சி..!!