மேலூர் உள்ளிட்ட தென்மாவட்ட விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய மாபெரும் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களுக்கு மேலூர் நகரின் மையப்பகுதியில் கம்பீரச் சிலை நிறுவப்படும் என்றும், அதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் திறந்து வைப்பார்கள் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணப்பட்டி கிராமத்தில் உள்ள பிரதான கண்மாயைத் தனியார் தொண்டு நிறுவனம் மூலமாகத் தூர்வாரும் பணி திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் பணிகளை இன்று முறைப்படி கொடியசைத்துத் தொடங்கி வைத்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விசுவநாதன், நீர்நிலைப் பாதுகாப்பு மற்றும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆறு, குளம் மற்றும் கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை முறையாகப் புனரமைத்து மழைநீரைச் சேமிக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இத்தகைய தூர்வாரும் பணிகள் பருவமழை காலத்தில் விவசாயத்திற்கும் நிலத்தடி நீர் பெருக்கத்திற்கும் பெரிதும் துணைநிற்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து மேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விசுவநாதன், தென் தமிழகத்தின் விவசாயப் பாசனத்திற்கும் குடிநீருக்கும் உயிர்நாடியாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் தன்னலமற்ற தியாகத்தைப் போற்றும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையைப் பெற்று மேலூர் நகரின் மையப்பகுதியில் அவரது திருவுருவச் சிலை நிறுவப்படும். இச்சிலைத் திறப்பு விழாவிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்களையும் நேரில் அழைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே!!! விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!
அதேவேளையில், எதிர்வரும் இடைத்தேர்தல் அரசியல் களம் குறித்துப் பேசிய அவர், அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான திமுக படுதோல்வியடைந்து 3-வது இடத்திற்குத் தள்ளப்படும்; மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ஆளும் தவெக அரசு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்யும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மேலூர் தனியார் நிதி நிறுவன மோசடி! மக்களின் பணத்தை மீட்க நடவடிக்கை என அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!