பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, தனது ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டமாக நெதர்லாந்துக்கு வந்தடைந்தார். ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் அவருக்கு அந்நாட்டு முறைப்படி உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்கிய அரசியல் தலைவர்கள் நேரில் வந்து பிரதமரை வரவேற்றனர்.
பிரதமர் மோடி யுஏஇ உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் முதல் கட்டமாக யுஏஇக்கு சென்ற அவர், அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் முக்கிய சந்திப்பு நடத்தினார்.
அந்த சந்திப்பில் எரிசக்தி ஒத்துழைப்பு, ராணுவம், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக இந்தியாவின் உட்கட்டமைப்பு மற்றும் நிதித்துறையில் 48,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய யுஏஇ சம்மதித்துள்ளது பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிங்க: ரூ.48,000 கோடி முதலீடு!! ஐக்கிய அரசு எமிரேட்சில் கலக்கிய மோடி! முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
யுஏஇ பயணத்தை இரண்டரை மணி நேரத்தில் முடித்த பிரதமர், நேரடியாக நெதர்லாந்துக்கு புறப்பட்டார். ஆம்ஸ்டர்டாமில் தரையிறங்கிய அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு இந்தியா-நெதர்லாந்து உறவுகளின் வலிமையை பிரதிபலிக்கிறது.


பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். “ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்கினேன். இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ள நிலையில் நெதர்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளேன். பல துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோரை சந்திக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். பிரமாண்ட நிகழ்ச்சியில் உரையாற்றவும் அவர் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக பதிவிட்டுள்ளார்.
இந்த சுற்றுப்பயணம் இந்தியாவின் வெளியுறவு கொள்கையை வலுப்படுத்துவதோடு, பொருளாதார ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக உறவுகளை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுஏஇயில் கிடைத்த வெற்றிகரமான ஒப்பந்தங்களுக்குப் பிறகு நெதர்லாந்து பயணம் இந்தியாவுக்கு மேலும் பல பலன்களை தரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
பிரதமர் மோடியின் இந்த ஐரோப்பிய பயணம் இரு தரப்பு உறவுகளை பலப்படுத்தும் முக்கிய பயணமாக அமையும் என்று கருதப்படுகிறது.
இதையும் படிங்க: இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!! ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!