புதுடெல்லி: டெல்லியில் தொடங்கிய 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், அடுத்த 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். உலக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது.
டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, பிரிக்ஸ் அமைப்புக்கு தலைமை வகிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். நிலையான வளர்ச்சியை இந்தியா முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ளதாகவும், மக்களும் மனிதாபிமானமும் தங்களின் முதன்மையான நோக்கமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஐரோப்பாவுடன் மோதலா? உலக நாடுகளுக்கு புடின் சொன்ன முக்கிய செய்தி! ரஷ்யாவின் அடுத்த திட்டம் என்ன?

பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட மோடி, பல்வேறு நாடுகளை ஒருங்கிணைக்கும் முக்கிய தளமாக பிரிக்ஸ் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த அமைப்பை மேலும் வலுப்படுத்த உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பிரிக்ஸ் அமைப்பு தற்போது புதிய அடையாளத்தை பெற்றுள்ளதாகவும், அது எந்த நாட்டுக்கும் எதிரான அமைப்பு கிடையாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். குறிப்பாக, **அடுத்த 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை இப்போதே உருவாக்க வேண்டும்** என அவர் வலியுறுத்தியது மாநாட்டின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் தேவையான சீர்திருத்தங்களை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார். உலக வர்த்தகத்தில் கடல்வழிப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், கப்பல் மாலுமிகளின் பாதுகாப்பை எந்தச் சூழலிலும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
இதனிடையே, பல்வேறு சர்வதேச மோதல்களுக்கு தீர்வு காணும் வகையில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளே முன்னேற்றத்துக்கான வழி என்பதை வலியுறுத்தும் ‘டெல்லி பிரகடனம்’ இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது. எந்தவொரு நாட்டின் பெயரையும் நேரடியாக குறிப்பிடாமல் பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: காரா இது… நடமாடும் கோட்டையா? டெல்லியில் வைரலாகும் சீன அதிபர் ஜின்பிங்கின் ‘பாதுகாப்பு கோட்டை’ லிமோசின்!!