இன்று ஜூன் 23, சுதந்திர இந்தியாவின் தலைசிறந்த தேசியவாதத் தலைவரும், பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனருமான டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவு தினம். 'பலிதான் திவஸ்' என்று அழைக்கப்படும் இந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் அவருக்கு இதயம் நிறைந்த அஞ்சலியைச் செலுத்தினர்.
பிரதமர் மோடி தமது சமூக ஊடகப் பக்கத்தில் சமஸ்கிருத ஸ்லோகத்துடன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டார். “செயலாலோ, சந்ததியாலோ அல்லது செல்வத்தாலோ ஒருவன் அழியா நிலையை அடைவதில்லை. தியாகத்தினால் மட்டுமே அதை அடைய முடியும்” என்ற அந்த வரிகள் மூலம் முகர்ஜியின் தியாக உள்ளத்தைப் போற்றினார். மேலும், “தேசத்திற்கும் சமுதாயத்திற்கும் தனது முழு வாழ்க்கையையும் சுயநலமின்றி அர்ப்பணித்த நாட்டின் மாபெரும் ஒளிவிளக்கு டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலிகள். அவரது கூர்மையான சிந்தனைகளும் கொள்கைகளும் ஒவ்வொரு தலைமுறைக்கும் தாய்நாட்டிற்கு சேவை செய்ய ஊக்கமளிக்கும்” என்று குறிப்பிட்டார்.
கல்கத்தாவில் 1901-ல் பிறந்த சியாம பிரசாத் முகர்ஜி, இளம் வயதிலேயே அறிவார்ந்த திறமைக்கு பெயர் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், பின்னர் அரசியலில் இறங்கினார். சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் தொழில் மற்றும் விநியோகத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், கொள்கை ரீதியான முரண்பாடுகள் காரணமாக ராஜினாமா செய்தார். குறிப்பாக, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை (அரசியலமைப்புப் பிரிவு 370) கடுமையாக எதிர்த்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

“ஒரு நாட்டில் இரண்டு கொடிகள், இரண்டு பிரதமர்கள், இரண்டு அரசியலமைப்புகள் இருக்கக் கூடாது” என்ற அவரது உறுதியான குரல் இன்றும் தேச ஒற்றுமைக்கான முழக்கமாக ஒலிக்கிறது.1953-ல் காஷ்மீருக்குள் நுழைய அனுமதிச் சீட்டு (permit) முறையை எதிர்த்துப் போராடிய அவர், அனுமதி இன்றி காஷ்மீருக்குச் சென்றபோது கைது செய்யப்பட்டார். சிறைக்காவலில் இருந்த நிலையில் 1953 ஜூன் 23 அன்று மர்மமான சூழலில் உயிரிழந்தார். அவரது இந்த உயிர்த் தியாகம் பின்னர் காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைக்கப்படுவதற்கான அடித்தளத்தை அமைத்தது என்பது வரலாற்று உண்மை.
பாஜக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் இந்த நாளை 'பலிதான் திவஸ்' எனக் கொண்டாடி, தேசத்தின் இறையாண்மைக்காகத் தியாகம் செய்த முகர்ஜியின் வழியில் தொடர்ந்து பணியாற்ற உறுதி எடுத்துள்ளன. அவரது தியாக உணர்வும், தேசிய ஒற்றுமைக் கொள்கைகளும் இன்றைய இளம் தலைமுறைக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றன. டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவு, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்காக உயிரையும் பதவியையும் துச்சமாகக் கருதிய உண்மையான தேசபக்தரின் சின்னமாக என்றும் நிலைத்திருக்கும்.
இதையும் படிங்க: 12 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை.. மத்திய அமைச்சர் பெருமிதம்!