தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதிலிருந்தே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். தற்போது ஆளும் கட்சியாக உள்ள திமுக தேர்தல் பணியை முதலில் தொடங்கிவிட்டது. '200 தொகுதிகளில் வெல்வோம்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து, தேர்தல் பணியை துவங்கியுள்ளார். மேலும் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் திமுகவினர் தமிழ்நாடு முழவதும் மக்களின் வீடுகளுக்கே சென்று பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் எதிர்க்கட்சியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் விஜய்யின் முதலமைச்சர் வேட்பாளர் நான் தான் என்ற அறிவிப்பு, சீமானின் தனித்து போட்டி என்ற விடாப்படி கொள்கை ஆகியவற்றால் 4 முனை போட்டி நிலவுவது உறுதியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: 3 வாரம் தான் இந்தியாவில்.. மீண்டும் வெளிநாடுகளுக்கு பயணம்.. பிரதமர் மோடியை கிண்டலடித்த ஜெய்ராம் ரமேஷ்..!
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூலை 27 மற்றும் 28ம் தேதிகளில் இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் அரியலூர், பெரம்பலூர், மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பயணம் மேற்கொள்ள உள்ளார். குறிப்பாக, அரியலூரில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை நிகழ்வில் பங்கேற்க உள்ளதாகவும், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களுடன் பிரதமர் பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்திற்கு முன்னதாக, ஜூலை 26ம் தேதி அன்று கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத்துறை, மற்றும் காவல் துறை அதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பயணம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இது பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு வர்த்தகம்!! பிரேசிலில் சொல்லி அடித்தார் பிரதமர் மோடி.. அடுத்தது நமீபியா!