'ஆபரேஷன் சிந்துார்' மற்றும் போர் நிறுத்தம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்," நாட்டின் பலமும் ராணுவ வீரர்களின் பலமும் நிரூபணமாகியுள்ளது. இந்தியா என்ன செய்யும் என்று உலகமே கண்டுவிட்டது. ராணுவ வீரர்களுக்கும், உளவுத்துறையினருக்கும், ஆயுதங்களை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கும் என்னுடைய வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆபரேஷன் சிந்துாருக்கு ஆதரவாக நின்ற பொது மக்களுக்கு என்னுடைய நன்றி.

பஹல்காமில், துளியும் கருணை இல்லாமல் குடும்பத்தினர், குழந்தைகள் கண் முன்னே குடும்ப தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், என்னை மனதளவில் மிகவும் வேதனைக்கு ஆளாக்கிவிட்டது.
இந்தத் தாக்குதலுக்கு பிறகு, ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நின்றனர். பயங்கரவாதிகளை தீர்த்துக் கட்டுவேன் என்று நான் உறுதி அளித்தேன். அதன்படி இந்தியா தாக்குதல் நடத்தியது. பெண்களின் பெண்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை இன்று பயங்கரவாதிகள் உணர்ந்துள்ளனர். அந்தளவுக்கு நாம் துல்லிய தாக்குதல் நடத்தி இருக்கிறோம்.

இப்படியொரு தாக்குதலை நடத்துவோம் என்று பயங்கரவாதிகள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். சிந்துார் நடவடிக்கை மூலம், பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத முகாம்கள் துடைத்து எறியப்பட்டுள்ளதை ராணுவம் உறுதி செய்துள்ளது. பயங்கரவாத முகாம்கள் பகாவல்பூர், முரித்கேவில் அழிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் இந்த முகாம்களுக்கு முக்கிய தொடர்பு உள்ளது. நம் தாக்குதலால் அச்சம் அடைந்த பாகிஸ்தான், இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. அந்த நாடு பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து, நம் மக்கள் மீதும், பள்ளிகள், கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.

நாம் பாகிஸ்தான் மீது ஏவிய ஒவ்வொரு ஏவுகணையும், டிரோன்களும் இலக்கை வெற்றிகரமாக குறி வைத்தன. அவர்களது ட்ரோன்கள் எல்லாம் சுட்டு வீழ்த்தப்பட்டதை உலகம் கண்டது. மூன்று நாட்களிலேயே இந்த போரில் இருந்து தப்பிக்கும் வழியை பாகிஸ்தான் தேடியது. டி.ஜி.எம்.ஓ., மூலம் சண்டை நிறுத்தம் செய்ய வேண்டுகோள் விடுத்தது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான சண்டை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் சீண்டினால் இந்தியாவின் உண்மையான பலத்தை பாகிஸ்தான் பார்க்க வேண்டியிருக்கும். பாகிஸ்தானின் எதிர்கால செயல்பாடுகளை பொறுத்து, போரை நிறுத்தி வைத்திருப்பது ஆய்வு செய்யப்படும்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக போரா..? ராணுவத்துக்கு எதிராக திரளும் 2 கோடி பாக்., மக்கள்..!

மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நாம் யார் என்பதை பாகிஸ்தானுக்கு காட்டுவோம். அதே நேரத்தில் எந்த விதமான அணு ஆயுத அச்சுறுத்தலையும் இந்தியா பொறுத்துக் கொள்ளாது. அதை சகித்துக் கொள்ளாது. நமது ஒட்டு மொத்த படைகளும் உச்சபட்ச விழிப்பு நிலையில் உள்ளன. போர்க்களத்தில் ஒவ்வொரு முறையும் நாம் பாகிஸ்தானை தோற்கடித்து வந்திருக்கிறோம்.
ஒட்டு மொத்த உலகமும் பாகிஸ்தானின் உண்மையான முகத்தை தற்போது பார்த்து விட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பாதுகாப்பு தளவாடங்களின் வலிமையான செயல்திறனை உலகம் பார்த்து விட்டது.
இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் மரியாதை செய்திருக்கிறது. எதிர்காலத்தில் பாகிஸ்தான் நிலைத்திருக்க வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் பயங்கரவாத முகாம்களை முற்றிலும் அழிக்க வேண்டும். இல்லையெனில் பயங்கரவாதத்துக்குப் பாகிஸ்தான் பலியாக நேரிடும்." என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா -பாக்., மோதலில் பல்லிளித்த சீன ஆயுதங்கள்..! கைகொட்டி சிரிக்கும் உலக நாடுகள்..!