பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் இரு நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். நேற்று அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மொத்தம் ரூ.1,050 கோடி மதிப்பிலான 48 முடிக்கப்பட்ட திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.5,300 கோடி மதிப்புடைய 112 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் மாநாட்டிலும் பங்கேற்று உரையாற்றினார்.
இரவு பரேகா விருந்தினர் மாளிகையில் அவர் தங்கினார். இன்று காலையில் பரேகா விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் சுமார் 12 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோவாக மக்களைச் சந்தித்தவாறு சென்றார். பாதி நெடுஞ்சாலை முழுவதும் பொதுமக்களும், பாஜக தொண்டர்களும் அலைமோதினர்.

பிரதமரை வரவேற்க மக்கள் மலர்களைத் தூவியும், உற்சாகக் கோஷங்களை எழுப்பியும் வரவேற்றனர். கோயில் அருகே ஏராளமான பெண்கள் மலர்களைத் தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர். காசி விஸ்வநாதர் கோயிலை அடைந்ததும், கோயில் நிர்வாகம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு குழந்தைகளுடன் உரையாடிய பிரதமர், பின்னர் கோயிலுக்குள் சென்று ஸ்ரீ காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தார்.
இதையும் படிங்க: ஜாலி மோடில் பிரதமர் மோடி..!! சிறுவர் - சிறுமிகளுடன் ஃபுட்பால் விளையாடி உற்சாகம்..!!
நாட்டின் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நலனுக்காக பிரார்த்தனை செய்தார். ‘சோடஷ உபசார’ முறையில் 16 வகையான சிறப்பு வழிபாடுகளை நடத்திய பிரதமர் மோடி, வழிபாட்டை முடித்துவிட்டு வெளியே வந்தபோது, கோயில் வளாகத்துக்கு வெளியே கூடியிருந்த மக்கள் “ஜெய் ஸ்ரீ ராம்” மற்றும் “ஹர் ஹர் மஹாதேவ்” என்று உற்சாக முழக்கமிட்டனர். பின்னர் பிரதமருக்கு சிவபெருமானின் அடையாளங்களான உடுக்கை (டமரு) மற்றும் திரிசூலம் வழங்கப்பட்டது.
ஒரு கையில் உடுக்கையையும், மற்றொரு கையில் திரிசூலத்தையும் ஏந்தியபடி பிரதமர் மோடி மக்களுக்கு கை அசைத்து வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பாபத்பூர் விமான நிலையத்துக்கு சென்ற பிரதமர், அங்கிருந்து ஹர்தோய் நோக்கி விமானம் மூலம் புறப்பட்டார். ஹர்தோயில் நடைபெறும் நிகழ்ச்சியில், 594 கிலோமீட்டர் நீளமுள்ள 6 வழிப் பிரிவு கொண்ட கங்கா விரைவுச் சாலையை (Ganga Expressway) பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

இந்த விரைவுச் சாலை 12 மாவட்டங்கள் வழியாகச் சென்று 519 கிராமங்களை இணைக்கிறது. எதிர்காலத்தில் ஹரித்வார் மற்றும் ஜெவார் விமான நிலையங்களுடனும் இந்தச் சாலை இணைக்கப்பட உள்ளது.தொடர்ந்து, மல்லாவன் நகரில் உள்ள பந்திப்பூர் வெட்டுப் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்ற உள்ளார். உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதலமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இதையும் படிங்க: காற்று எரிசக்தி.. உலகளவில் இந்தியா 4ம் இடம்..!! மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்..!!