பீகார் சட்டமன்றத் தேர்தலில் தீவிரப் பிரசாரம் செய்யும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், இரண்டு மாநிலங்களின் வாக்காளர் பட்டியல்களிலும் பதிவாகியுள்ளார். இது தேர்தல் விதி மீறல் எனத் தெரியவந்ததும், தேர்தல் ஆணையம் (ECI) அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது. இந்தப் புகார், பீகார் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரசாந்த் கிஷோர், தேர்தல் உத்திகளுக்காக பிரபலமான அரசியல் ஆலோசகர். அவர் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கட்சிகளுக்கு உதவியுள்ளார். கடந்த 2024 அக்டோபரில் ஜன் சுராஜ் என்ற தனி கட்சியைத் தொடங்கினார். இந்த ஆண்டு இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், நவம்பர் 2025-இல் நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் 243 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். ‘பீகார் முதல்’ என்ற முழக்கத்துடன் தீவிரப் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரது பெயர் பீகார் மற்றும் மேற்கு வங்கம் வாக்காளர் பட்டியல்களில் இருப்பதாக BJP தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டினார். பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் கர்கஹர் (Kargahar) தொகுதியில் (அவரது சொந்த கிராமம்) 2019 முதல் அவரது பெயர் உள்ளது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தா பாபானிபூர் (Bhabanipur) தொகுதியில், TMC தலைமையகம் (121, கலிகட் ரோடு) முகவரியில் 2025 இறுதி வாக்காளர் பட்டியலில் பதிவு. இது மம்தா பானர்ஜி தொகுதியாகும்.
இதையும் படிங்க: பரபரக்கும் பீகார்! நிதிஷ்குமாருக்கு கடைசி தேர்தல்?! முதல் அடியை எடுத்து வைக்கும் பிரசாந்த் கிஷோர்! ஆம் ஆத்மி!

இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்-1950ன் 17-வது பிரிவின்படி, ஒருவர் இரண்டு இடங்களில் வாக்காளராக பதிவாக முடியாது. மீறல் செய்தால், 31-வது பிரிவின்படி 1 ஆண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். கர்கஹர் தொகுதி ரிட்டர்னிங் அதிகாரி அனுப்பிய நோட்டீஸில், “நீங்கள் இரண்டு மாநிலங்களிலும் பதிவாகியுள்ளீர்கள். 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும்” என்று கூறப்பட்டுள்ளது.
பிரசாந்த் கிஷோர் பதிலளித்தபோது, “பீகாரில் எனது சொந்த கிராமத்தில் 2019 முதல் பெயர் உள்ளது. 2 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் இருந்ததால், அங்கு பெயரை மாற்றினேன். ஆனால் பீகாரில் நீக்கவில்லை. இப்போது பீகாருக்கு வந்துவிட்டேன். சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (SIR) என் பெயர் உறுதி செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் என்னை பயமுறுத்துகிறது. தவறு செய்ததாக நிரூபித்தால் கைது செய்யுங்கள்” என்றார்.
இந்தப் புகாருக்கு அரசியல் கட்சிகள் கடும் விமர்சனம் எழுப்பி வருகின்றன. JD(U) பேச்சாளர் நீரஜ் குமார், “டெல்லியில் நிறுவனங்கள் உள்ளவர், பீகாரைச் சேர்ந்தவர், ஏன் மேற்கு வங்கத்தில் வாக்காளரானார்? மம்தா பானர்ஜியுடன் ராஜ்யசபை ஒப்பந்தமா?” என்றார்.
RJD தலைவர் மனஜ் குமார், “EC அவசர தீவிர திருத்தத்தில் (SIR) பலரது பெயர்களை நீக்கியது. பிரசாந்த் போன்ற பிரபலருக்கு ஏன் அதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார். TMC தலைவர் பிஸ்வஜித் சர்கார், “அவர் இங்கு வசிப்பவர் அல்ல. அவரது பெயரை நீக்க கோரியுள்ளோம்” என்றார். EC, பீகாரில் SIR 2.0-ஐ தொடங்கியுள்ளது. இதில் 2.5 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பிரசாந்த் கிஷோரின் வாக்காளர் பதிவு, தேர்தல் பட்டியல்களின் துல்லியத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அவரது பதில் அடுத்த நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
இதையும் படிங்க: இந்தியை எதிர்த்தா எப்படி ஸ்டாலின்?! பீகார் தேர்தல் எதிரொலி! இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பு!