காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது.
இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இதில் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தியாவில் 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இந்த ஏவுகணை தாக்குதல்களை இந்திய பாதுகாப்பு படை முறியடித்துள்ளது.

இதையடுத்து மீண்டும் இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதாகத் தகவல் வெளி வந்துள்ளது. பாகிஸ்தானின் ட்ரோன்களை நம் நாட்டின் வான்வெளி தடுப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவின் எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு சுமார் 8 பாகிஸ்தான் ட்ரோன்களை வீழ்த்தியுள்ளது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் அத்துமீறி இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகின்றனர். ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்து வந்த 8 ஏவுகணைகளையும் தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தன. இதைத்தொடர்ந்து இந்தியா மீது மீண்டும் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: காஷ்மீர் விமான நிலையம் மீது பாக். தாக்குதல்... எஸ்400-ஐ பயன்படுத்தி இந்திய ராணுவம் பதிலடி!!

பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்திய விமானப் படை பதிலடியை கொடுத்துள்ளது. நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது. பாகிஸ்தான் 50க்கும் மேற்பட்ட டிரோன்களை பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் மேற்கொண்டது.
உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த டிரோன் தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. 50க்கும் மேற்பட்ட டிரோன்கள் அழிக்கப்பட்டன. இந்த நிலையில் ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையில் தற்கொலை ட்ரோன்கள் முக்கிய பங்கு வகித்தன. இவை பாலாகோட் தாக்குதலுக்குப் பிறகு ராணுவத்தில் சேர்க்கப்பட்டன. இவை சாதாரண ட்ரோன்களைப் போலவே பறக்கின்றன, ஆனால் இலக்கைக் கண்டறிந்தவுடன் அதன் மீது நேரடியாகத் தாக்கி வெடிக்கின்றன.

மேலும் இந்த ட்ரோன்கள் பெங்களூருவில் தயாரிக்கப்பட்டவை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கு பெங்களூருவில் உள்ள தொழில்துறை பகுதியில் இந்த தற்கொலை ட்ரோன்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆல்பா டிசைன் மற்றும் இஸ்ரேலின் எல்பிட் செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் இணைந்து ட்ரோன் தயாரிப்பை மேற்கொள்கின்றன. இந்த இரண்டு நிறுவனங்களின் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. இந்திய ராணுவம் சிறப்பு 100 ட்ரோன்களை வாங்க ஆர்டர் செய்தது. 100 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய இந்த டிரோன்கள் 5 முதல் 10 கிலோ எடையைத் தாங்கும் திறன் கொண்டவை.
குறைந்த உயரத்தில் இயங்கும் இந்த ட்ரோன்களின் சத்தம் மிகவும் குறைவு. எனவே இவற்றின் நகர்வு ரகசியமாக இருக்கும். இந்த இந்த ட்ரோன்கள் முதலில் வானில் சுற்றி இலக்குகளைக் கண்டறியும். மனித தலையீடு இல்லாமல் செயல்படும் தானியங்கி அமைப்பு உள்ளது. அதிக துல்லியத்தன்மை கொண்ட இந்த ட்ரோன்கள் மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கும் திறன் கொண்டவை. ஒரே இயந்திரத்தில் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் தொழில்நுட்பம் உள்ளது. கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதையும் படிங்க: பாகிஸ்தானை கைவிட்ட துருக்கி… இஸ்லாமாபாத் & லாகூருக்கான அனைத்து விமானங்களும் ரத்து!!