வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ‘அர்னாப்’ புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ‘தீவிரப் புயலாக’ வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இது மேலும் தீவிரமடைந்து ‘மிக தீவிரப் புயலாக’ மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த அர்னாப் புயல், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தீவிரப் புயலாக வலுப்பெற்றது. தற்போது இது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்குத் தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு கிழக்கே சுமார் 730 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

வானிலை மையத்தின் கணிப்பின்படி, இப்புயல் தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் 'மிக தீவிரப் புயலாக' மாறக்கூடும். அதன்பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திராவின் கடலோரப் பகுதியான பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே உள்ள ஏனாம் அருகே வரும் அக்டோபர் 28-ஆம் தேதி முற்பகலில் மிக தீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: வார்னிங்..!! அர்னாப் புயல்..! 9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!
அர்னாப் புயல் கரையைக் கடக்கும் நிகழ்வின் போது கடலோரப் பகுதிகளில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகக் கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING “வந்துட்டான்யா... வந்துட்டான்யா...” - உருவானது ‘அர்னாப் புயல்’... தமிழகத்திற்கு பேராபத்தா?