ரயிலில் பயணம் செய்யும்போது, குறிப்பாக இரவு நேரங்களில், சில பயணிகள் தங்கள் மொபைல் போனில் சத்தமாக ரீல்ஸ் பார்ப்பது அல்லது உரத்த குரலில் போன் பேசுவது பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது. இது சக பயணிகளுக்கு பெரும் தொந்தரவை ஏற்படுத்துகிறது. நீண்ட தூர ரயில் பயணங்கள் பெரும்பாலும் இரவில் நடப்பதால், பலர் தூங்கி ஓய்வு எடுக்க விரும்புகின்றனர். ஆனால், அருகில் உள்ள ஒருவர் ஸ்பீக்கரில் ரீல்ஸ் அல்லது வீடியோக்களை இயக்கினால், அந்த சத்தம் முழு பெட்டியையும் நிரப்பி, அமைதியை கெடுத்துவிடுகிறது.
அதேபோல், போன் உரையாடல்களை உரத்த குரலில் நடத்துவது, தனிப்பட்ட உரையாடல்களை அனைவரும் கேட்க வைப்பதோடு, மற்றவர்களின் தூக்கத்தையும் பாதிக்கிறது.இன்றைய ஸ்மார்ட்போன் யுகத்தில், சமூக வலைதளங்களில் ரீல்ஸ், ஷார்ட்ஸ் போன்றவை பிரபலமடைந்துள்ளன. பயண நேரத்தை கொல்ல இவற்றை பார்ப்பது இயல்பானது தான். ஆனால், அதை ஹெட்போன் அல்லது ஏர்போட்ஸ் இல்லாமல் சத்தமாக இயக்குவது, சக பயணிகளின் உரிமையை மீறுவதாகும். ரயில் பெட்டி ஒரு பொது இடம். இங்கு பல்வேறு வயது, பின்னணி கொண்டவர்கள் ஒன்றாக பயணிக்கின்றனர்.

குழந்தைகள், முதியவர்கள், வேலைக்கு செல்பவர்கள், நோயாளிகள் என அனைவரும். அவர்களில் பலர் நாள் முழுவதும் சோர்வடைந்து, இரவில் தூங்கி ஓய்வு எடுக்கத்தான் ரயிலை தேர்வு செய்கின்றனர். அப்போது வரும் இத்தகைய சத்தங்கள் அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவது மட்டுமல்ல, அடுத்த நாள் பணிகளையும் பாதிக்கின்றன.இந்திய ரயில்வேயும் இந்த பிரச்சினையை உணர்ந்து, பயணிகளின் வசதிக்காக சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இரவு 10 மணிக்கு பிறகு, ரயில் பெட்டிகளில் அமைதியை பேணுவது கட்டாயம். இயர்போன் இல்லாமல் இசை கேட்பது, வீடியோக்கள் அல்லது ரீல்ஸ் பார்ப்பது, உரத்த குரலில் போன் பேசுவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டால், ரயில் ஊழியர்கள் அல்லது ஆர்பிஎஃப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். ரயில்வே சட்டம் 1989ன் பிரிவு 145ன் கீழ், இது தண்டனைக்குரிய குற்றமாகும். பல சமயங்களில் பயணிகள் புகார் அளிப்பதால், ரயில்வே இத்தகைய விதிகளை அமல்படுத்தி வருகிறது. இரவு 10 மணிக்கு பிறகு பெட்டியில் உள்ள நைட் லைட் தவிர அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட வேண்டும் என்பதும் இதில் அடங்கும்.
இதையும் படிங்க: மக்களே கவனிங்க... பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை... கர்நாடகா அரசின் முக்கிய முடிவு...!
தொலைதூர பயணங்களுக்குச் செல்லும்போது இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் அதிக சத்தமாக ரீல்ஸ் பார்ப்பதற்குத் தடை விரிக்கப்பட்டுள்ள நிலையில், சக பயணிகளுக்குத் தொல்லை தரும் வகையில் சத்தமாக ரீல்ஸ் பார்த்தாலோ, தொலைபேசியில் பேசினாலோ ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: மக்களே கவனிங்க... 55 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு... அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்...!