கோவா கப்பல் கட்டும் தளத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பலான 'சமுத்திர பிரதாப்' கப்பலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனவரி 5 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்திய கடலோர காவல்படைக்காக தயாரிக்கப்பட்ட இரண்டு மாசு கட்டுப்பாட்டு கப்பல்களில் முதலாவதாக இந்த கப்பல் விளங்குகிறது. இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த கப்பல் கடல் மாசு கட்டுப்பாட்டில் பெரும் பங்காற்றும் என்று ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.
சமுத்திர பிரதாப் கப்பல் 114.5 மீட்டர் நீளமும் 4,200 டன் எடையும் கொண்டது. இது 6 ஆயிரம் கடல் மைல்கள் வரை பயணிக்கும் திறன் கொண்டது. கப்பலில் ரசாயனப் பொருட்களைக் கண்டறியும் கருவிகள், தீயணைப்பு உபகரணங்கள், மாசுகளை அகற்றும் சாதனங்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: திருமணம் செய்ய விரும்பிய பாக்., பெண்!! வரதட்சணையாக வாஜ்பாய் கேட்டது இதைத்தான்! ராஜ்நாத்சிங் தகவல்!
கப்பலில் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் 60 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இது 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்தின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது.

கோவா கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசுகையில், "தொலைநோக்கு பார்வையுடன் இந்திய கடற்படையில் சமுத்திர பிரதாப் கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. கடல் வளங்கள் எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமானது அல்ல.
கடலோர காவல்படையில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து அதிகாரம் வழங்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம். சமுத்திர பிரதாப் கப்பல் இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
இந்த கப்பலை இயக்குவது நமது வலிமையை மேலும் உயர்த்தும். இது நமது கூட்டு முயற்சியின் அடையாளம். மாசு கட்டுப்பாட்டை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கப்பல் இன்றைய சவால்களை எதிர்கொள்ள மிகவும் அவசியம்" என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்திய கடலோர காவல்படையின் திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட சமுத்திர பிரதாப் கப்பல் கடல் மாசு தடுப்பு, எண்ணெய் கசிவு போன்ற அவசர நிலைகளில் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு மைல்கல்லாகவும் விளங்குகிறது.
இதையும் படிங்க: இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவு!! பாகிஸ்தான் மீனவர்கள் 11 பேர் கைது! கடலோர காவல்படை அதிரடி!