கேரளாவில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கோழிக்கோடு, எர்ணாகுளம் பகுதிகளில் பலத்த காற்றால் மரங்கள், வீட்டுக் கூரைகள் சேதமடைந்தன. வடக்கு கேரளாவில் ஜூலை 15 முதல் பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் நிரம்பி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருகிறது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக அதிகனமழை (24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல்) பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மேல் அடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு-மேற்கு தாழ்வு மண்டலம் காரணமாக மழை தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்வி.. ஆக.,19-ல் விசாரணையை துவங்கும் சுப்ரீம் கோர்ட்..!
இந்த மழையால் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கடல் கொந்தளிப்பு மற்றும் 1.5 முதல் 1.8 மீட்டர் உயர கடல் அலைகள் (கல்லக்கடல்) எழ வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, கூடுதலாக 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டில் இருந்து ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது. இதனால், மொத்தம் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளன.

பலத்த மழையால் பாலக்காடு, திரிசூர் மற்றும் எர்ணாகுளம் பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக, பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் மீட்பு குழுக்கள் உஷார் நிலையில் உள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவும், அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்..