நாட்டின் 77-ஆவது குடியரசு தினம் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு முறை அமலுக்கு வந்துள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், தீவிரவாதச் சதித் திட்டங்களை முறியடிக்கவும் தமிழ்நாடு ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் (RPF) இணைந்து சுமார் 2,500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ரயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் தீவிரமாகச் சோதிக்கப்படுகின்றன. வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் அனைத்து நுழைவாயில்களிலும் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் இணைந்து தண்டவாளங்களில் விஷமிகள் ஏதேனும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளனரா என்பது குறித்தும், வெடிபொருட்கள் ஏதேனும் வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடியரசு தினம்: திருச்சி ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு.. பயங்கரவாத அச்சுறுத்தலால் தீவிர நடவடிக்கை..!!
ரயில் பயணத்தின்போது அல்லது ரயில் நிலையங்களில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நபர்களையோ, பொருட்களையோ கண்டால் உடனடியாகப் புகார் அளிக்கப் பிரத்யேக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவசர உதவிக்கு: 139
தமிழ்நாடு இருப்புப் பாதை காவல்துறை: 1512
வாட்ஸ்அப் புகார் எண்: 9962500500
சென்னையில் மட்டும் சுமார் 1,850 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், சேலம் மற்றும் பிற பிரிவுகளிலும் கூடுதல் பலம் சேர்க்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் போலீசார் விழிப்புடன் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், பயணிகள் அச்சமின்றிப் பயணிக்கலாம் என ரயில்வே காவல்துறை உறுதி அளித்துள்ளது.
இதையும் படிங்க: ஆரவல்லி மலைத்தொடர் பாதுகாப்பு: மத்திய அரசின் உத்தரவை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்!