திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சேர்ந்தவர் தொழிலதிபரின் மகள் ரிதன்யா. இவருக்கு கவின்குமார் என்பவரோடு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி 78 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், கணவன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ரிதன்யாவை கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் மனமடைந்து போன ரிதன்யா செய்வதறியாமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே தனது காரை ஓட்டிச் சென்ற ரிதன்யா தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் வழிபட்டுள்ளார்.
தொடர்ந்து சாலையோரமாக காரை நிறுத்திய அவர், தனது வாழ்க்கை தொடர்பாகவும், தனது சாவுக்கு யார் காரணம் என்பது தொடர்பாகவும் ஆடியோ ஒன்றை வாட்ஸ் அப் மூலம் தனது தந்தைக்கு அனுப்பி விட்டு தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது திருமண வாழ்க்கை சரியாக இல்லை என்றும் ஒருவனுக்கு ஒருத்தி தான் என்ற ஆடியோவையும் ரிதன்யா தன் அப்பாவுக்கு அனுப்பினார். மேலும், கணவன் கவின்குமார் மற்றும் மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதாக ரிதன்யா வேதனை தெரிவித்திருந்தார்.

இனியும் தன்னால் வாழ முடியாது என தந்தைக்கு ஆடியோ அனுப்பி வைத்துவிட்டு ரிதன்யா எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, தங்கள் மகள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என ரிதன்யாவின் பெற்றோர் கோரி வருகின்றனர்.
இந்த நிலையில், பாலியல் துன்புறுத்தல் பிரிவிலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமாரிடம் ரிதன்யாவின் தந்தை புகார் அளித்துள்ளார். மேலும் தனது மகள் ரிதன்யாவின் பிரேதப்பரிசோதனை அறிக்கை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: அவிநாசி ரிதன்யா வழக்கில் மீண்டும் அதிரடி... மாமியாருக்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு...!
இதையும் படிங்க: ரிதன்யாவின் மரணம் தற்கொலை அல்ல, அது திட்டமிட்ட கொலை.. சாட்டையை சுழற்றிய சீமான்..!