சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல பூஜை காலத்தில் இதுவரை 210 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதில் அரவணை விற்பனை மட்டும் 106 கோடி ரூபாய் வருவாய் அளித்துள்ளது.
சன்னிதானத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதி முடிந்து நடை சாத்தப்பட்ட பிறகு, மூன்று நாட்களில் முடிந்த அளவு அரவணை உற்பத்தி செய்து இருப்பு வைக்கப்படும் என்றார். தினசரி 2.5 லட்சம் டின் அரவணை உற்பத்தி செய்யப்படுவதுடன், ஏற்கனவே உள்ள ஒரு லட்சம் டின் இருப்பும் பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
சீசன் தொடக்கத்தில் அரவணைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வழங்கப்பட்டது. ஆனால், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு அரவணை விற்பனை பல மடங்கு அதிகரித்ததால் கையிருப்பு குறைந்தது என்று அவர் விளக்கினார்.
இதையும் படிங்க: ஐயப்பன் கோவில் தங்கம் யாருக்கு போச்சு? சபரிமலை தங்கத்தகடுகள் மாயமான வழக்கு! 'மாஜி' அதிகாரிக்கு கிடுக்குப்பிடி!

ஒரு நாளைக்கு 3.5 லட்சம் டின் விற்பனை என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4.5 லட்சம் டின் வரை விற்பனை நடந்து வருவதாகவும் கூறினார். ஒரு பக்தருக்கு 20 டின் அரவணை என்ற கட்டுப்பாடு தொடரும் என்றும், எல்லோருக்கும் அரவணை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுப்பாடு அமலில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
அறை முன்பதிவு செய்து தங்கிய பக்தர்களுக்கு முன்பணம் திரும்ப வழங்க தனி கவுன்டர் திறக்கப்படும் என்றார். ஆன்லைனில் செலுத்திய முன்பணத்தை நேரடியாக வங்கிக் கணக்குக்கு திரும்ப செலுத்தும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யப்படும் என்றும் கூறினார்.
மகர விளக்கு காலத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய டிசம்பர் 26ஆம் தேதி அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சுவாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்! தேவஸம் போர்டு அப்டேட்!