தமிழ்நாட்டில் மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணல் கொள்ளை தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாகக் கனிமவள ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கனிமவள ஆணையர் மோகன் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது, அவரிடம் தமிழ்நாட்டில் தொடரும் மணல் கொள்ளையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த கனிமவள ஆணையர், மணல் கொள்ளையில் ஈடுபடுவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறினார். மேலும், ஆன்லைன் பதிவு முறை, ஜி.பி.எஸ். மூலம் கண்காணிப்பு உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெல்லும் தமிழ் பெண்கள்! மகளிர் உரிமைத் திட்டம் 2வது கட்டத்தை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!
அபராதம் விதிப்பது மட்டும் போதாது எனக்கூறிய நீதிபதிகள் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் குறிப்பிட்டனர். கனிம வளங்கள் நாட்டின் சொத்து எனத் தெரிவித்த நீதிபதிகள் அவற்றைக் கொள்ளையடிக்க அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
மணல் கொள்ளையர்களுடன் இணைந்து அதிகாரிகள் செயல்பட்டால் இதனைத் தடுக்கவே முடியாது எனக்கூறிய நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறினர்.
மணல் கொள்ளையை இப்படியே அனுமதித்தால் அது பெரிய ஆபத்துக்கு வழிவகுக்கும் எனக்கூறிய நீதிபதிகள் மணல் கொள்ளையைத் தடுப்பதற்கு குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை எனத் தெரிவித்தனர். இதனையடுத்து, மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கனிமவள ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: "வீரபாண்டிய கட்டபொம்மனை வடபுலம் அறியாது": மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு!