சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனை உறுதி செய்யக்கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல். குற்றவாளிகள் அனைவரும் ஜூன் 1ம் தேதிக்குள் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய வேண்டும். ஜூன் 4-ஆம் தேதி முதல் வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கு தினந்தோறும் விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கு தமிழகமே உற்று நோக்கும் வழக்கு என நீதிபதிகள் அதிரடி கருத்து.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யபட்டனர். இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையின் CBI வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் இடம்பெற்றார். மேலும், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதையும் படிங்க: பெரும் எதிர்ப்பார்ப்பு... சாத்தான்குளம் வழக்கில் இன்று தண்டனை விபரம் அறிவிப்பு..!!
இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து வழக்கின் குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கிய உத்தரவிட்டார். இந்த நிலையில் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனை உறுதிப்படுத்த கோரி தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது ஒன்பது பேரும் சிறையில் இருந்தவாரே, காணோலி வாயிலாக ஆஜராகினர். அப்போது நீதிபதிகள், குற்றவாளிகள் 9 பேரையும் தனித்தனியாக அழைத்து வழக்கு வாதாடுவதற்கு வழக்கறிஞர்களை நியமித்துவிட்டீர்களா? என கேள்வி எழுப்பினார்.
அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது வழக்கறிஞர்கள் நியமித்துவிடுவதாக கூறினர். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் சிபிஐ தரப்பில் மேல்முறையீடும் செய்யபட்ட மனு நகல் குற்றவாளிகளுக்கு விரைவில் கிடைக்க நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
அப்போது இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ஸ்ரீதர் மேல்முறையீடு செய்வதற்கான மனுகள் தயாரிப்பதற்காக 15 நாட்கள் சாதாரண சிறை விடுப்பு கோரினார். அதற்கு நீதிபதிகள், மேல்முறையீடு மனு தயாரிப்பதற்கு போதிய வசதிகள் சிறைத்துறை செய்து தரும். சிறையில் அனைத்து வசதிகளும் உள்ளது. எனவே விடுமுறை தருவது குறித்து நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
ஒன்றாம் தேதி வழக்கு தாக்கல் செய்யுங்கள் 4 ஆம் தேதி தினம்தோறும் வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும். இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கு தினம்தோறும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என கூறி வழக்கு விசாரணையை ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்… தூக்குல போடுங்க..! சிபிஐ வாதம்..!!