தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பின் தலைநகர் டெல்லியின் காற்று மாசு மிகமிகமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, டெல்லியின் காற்றின் தரக் குறியீடு (AQI) 357ஆக உயர்ந்துள்ளது, இது 'மிகவும் மோசமான' பிரிவில் வருகிறது. 38 கண்காணிப்பு நிலையங்களில் 36 இடங்களில் AQI 400க்கும் மேல் பதிவாகி, 'சிவப்பு மண்டலம்' என்ற அபாயகரமான நிலை உருவாகியுள்ளது. இதற்குக் காரணமாக, உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு மற்றும் பொதுமக்களின் பட்டாசு வெடிப்பு குற்றம்சாட்டப்படுகின்றன.

இந்நிலையில், முன்னாள் NITI ஆயோக் CEO மற்றும் 2023 ஜி20 உச்சக்கூட்டத்தின் இந்திய செர்பா அமிதாப் காந்த், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் உச்சநீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். "டெல்லியின் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. 38 நிலையங்களில் 36 'சிவப்பு மண்டலத்தை' தொட்டுள்ளன, முக்கிய இடங்களில் AQI 400க்கும் மேல் உள்ளது. வாழ்வதற்கான உரிமையை விட பட்டாசு வெடிக்கும் உரிமையை உச்சநீதிமன்றம் தேர்வு செய்து முன்னுரிமை அளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு டெல்லியின் மக்களின் உயிரோடு விளையாடுவதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஏமனில் கேரள நர்ஸ் தொடர்பான வழக்கு..!! மரண தண்டனை நிறுத்திவைப்பு.. உச்சநீதிமன்றத்தில் தகவல்..!!
இந்த மாதத்தின் தொடக்கத்தில், உச்சநீதிமன்றம் டெல்லி-NCR பகுதியில் 'பசுமை பட்டாசுகள்' மட்டுமே வெடிக்க அனுமதி அளித்தது. தீபாவளி நாளில் அதிகாலை 6 முதல் 7 வரை மற்றும் மாலை 8 முதல் இரவு 10 வரை மட்டுமே வெடிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் கொண்டாட்ட உரிமைகளுக்கு இடையிலான 'சமநிலை' என்று நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், பல இடங்களில் நள்ளிரவு வரை பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், காற்றில் புகை மண்டல் பரவியது. இதனால், பாவா (AQI 432), ஜஹங்கீர்புரி (409), வழிர்பூர் (408) போன்ற இடங்களில் AQI 'மிகவும் கடுமையான' நிலைக்கு மாறியது.
டெல்லி உலகின் மிக மாசு பெற்ற தலைநகர்களில் ஒன்றாகத் தொடர்கிறது என்று கூறியுள்ள அமிதாப் காந்த், "லாஸ் ஆஞ்சலஸ், பெய்ஜிங், லண்டன் போன்ற நகரங்கள் இதை சமாளித்துள்ளன, டெல்லி ஏன் செய்ய முடியாது?" என்று கேள்வி எழுப்பினார். இந்த சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுக்க, 'ரூத்லெஸ்' (Ruthless) மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்தினார்.

அமிதாப் காந்தின் பதிவு சமூக வலைதளத்தில் பரவலான பதிலையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரது வார்த்தைகளை ஆதரித்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு 'அரைகுறையானது' என்று விமர்சித்தனர். மற்றவர்கள், கொண்டாட்ட உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வாதிட்டனர். இருப்பினும், இன்று காலை டெல்லியில் தெருக்களில் புகை மூட்டம் பரவியிருக்க, மக்கள் முகமூடி அணிந்து செல்கின்றனர். சிலர் வெளியே செல்வதைத் தவிர்க்கின்றனர். சுகாதார நிபுணர்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு இது ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: பரபரப்பை கிளப்பும் கரூர் துயரச் சம்பவம்.. SIT-ஐ எதிர்க்கும் தவெக.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..!!