காஷ்மீரின் பஹல்காமில் காஷ்மீர் பயங்கரவாதிகள் 26 இந்து ஆண்களை சுட்டு கொன்றதற்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்தியா எடுத்தது. பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. தாக்குதல் நடத்தப்பட்ட விதம், அழிக்கப்பட்ட பயங்கரவாதிகள் முகாம் பற்றிய விவரங்களை வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படை விங் கமாண்டர் வியோமிக சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளுக்கு, பெண்கள் தலைமையிலான குழுவை வைத்தே பதிலடி கொடுத்ததாக மத்திய அரசு தெரிவித்தது. இச்சூழலில், ஆபரேஷன் சிந்தூர் பற்றி மத்திய பிரதேசத்தின் பழங்குடி விவகார அமைச்சர் விஜய் ஷா, ஒரு கலாச்சார நிகழ்ச்சியில் பேசினார்.
இதையும் படிங்க: தொடரும் துப்பாக்கி சப்தம்.. பயங்கரவாதிகளை வேட்டையாடும் ராணுவம்.. காஷ்மீர் புறப்பட்டார் ராஜ்நாத் சிங்!
அப்போது, ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரோஷியை ‘பயங்கரவாதிகளின் சகோதரி’ என குறிப்பிட்டார். பஹல்காமில் நம் சகோதரிகளின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கு அவர்களின் சொந்த சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்கள் சகோதரிகளை விதவைகள் ஆக்கினீர்கள். அதனால், உங்கள் சகோதரியை வைத்தே பதிலடி கொடுத்தோம்.

அவர்கள் சமூகத்தை சேர்ந்த மகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி பழிதீர்க்க வைத்தார் மோடி என அமைச்சர் விஜய் ஷா கூறினார். பாஜக அமைச்சரின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவரை பதவி நீக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தின. விஷயம் பூதாகரமானது. உள்நோக்கத்துடன் ஏதுவும் பேசவில்லை என அமைச்சர் விஜய் ஷா மன்னிப்பு கேட்டார். கர்னல் சோபியா என் சகோதரிகளை விட முக்கியமானவர். பேசியது தவறாக இருந்தால், ஒருமுறையல்ல 10 முறைகூட மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் என கூறினார்.

இந்த விவகாரத்தில் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரித்தது. நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன், அனுராதா சுக்லா ஆகியோர் அமைச்சர் விஜய் ஷா இழிவாக பேசியிருப்பதாக கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘பயங்கரவாதிளின் சகோதரி’ என கர்னல் குரேஷியை கூறியிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதால், இது BNS சட்டப்பிரிவு 152 மற்றும் IPC 196ன் கீழ் குற்றம் என நீதிபதிகள் கூறினர்.

இந்த சட்டப்பிரிவுகள் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், இரு சமூகங்கள் இடையே பகையை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைத்தல் குற்றங்களை குறிக்கின்றன. அமைச்சரின் பேச்சு முஸ்லீம்கள் இடையே பிரிவினைவாத உணர்வை தூண்டுவதாக இருப்பதாக கூறிய நீதிபதிகள், அமைச்சர் விஜய் ஷா மீது உடனடியாக வழக்கு பதியவும் உத்தரவிட்டனர்.
அதன்படியே விஜய் ஷா மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் ஷா தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு இன்று அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது.

மேலும் 'அரசமைப்புப் பதவியில் இருக்கும் ஒருவர் எப்படி இப்படி பேசலாம்? என்ன மாதிரியான அறிக்கைகளை நீங்கள் வெளியிடுகிறீர்கள்? அமைச்சர் என்பவர் பொறுப்புடன் பேச வேண்டும். குறிப்பாக 'ஆபரேஷன் சிந்தூர்' போன்ற முக்கியமான நடவடிக்கைகளின்போது, நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்' என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். விஜய் ஷா வின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது, உணர்ச்சியற்றது என்று கூறிய நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தில் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி வழக்கை நாளை விசாரிப்பதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஜஸ்ட் மிஸ்ஸு.. இந்தியாவின் அடியில் கதி கலங்கிய பாக்., நூலிழையில் தப்பிய VVIP விமானம்..!