நிலக்கரி ஊழல் வழக்குத் தொடர்பாக I-PAC நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையின்போது, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிகாரிகளை மிரட்டி ஆதாரங்களைப் பறித்துச் சென்றதாகக் கூறி, அவர் மீது சிபிஐ விசாரணை கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
மேற்கு வங்கத்தில் நிலக்கரி ஊழல் முறைகேடு தொடர்பாக, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிறுவனமான I-PAC அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது முதல்வர் மமதா பானர்ஜி தனது கட்சி நிர்வாகிகளுடன் அங்குச் சென்று அதிகாரிகளை மிரட்டியதாகவும், முக்கிய டிஜிட்டல் ஆதாரங்களை அங்கிருந்து எடுத்துச் சென்றுவிட்டதாகவும் அமலாக்கத்துறை பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக நிலவிய அசாதாரண சூழலைத் தொடர்ந்து, இந்த விவகாரம் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் விபுல் பஞ்சோலி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே சோதனையின் போது அத்துமீறி உள்ளே நுழைந்து, அதிகாரிகளிடமிருந்து ஆதாரங்களைப் பறித்துச் சென்றது அதிர்ச்சியளிக்கிறது. இது ஜனநாயகத்திற்குப் பதிலாகக் கும்பல் ஆட்சி நடப்பதையே காட்டுகிறது; டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். எனவே மமதா பானர்ஜி மற்றும் சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கடுமையாகச் சாடினார்.

இதையும் படிங்க: நாய்க்கடிக்கு நீங்களே பொறுப்பு! தெரு நாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஆவேசம்!
இதற்குப் பதிலளித்த மேற்கு வங்க அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறை முற்றிலும் பொய் சொல்கிறது; தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியின் வியூகங்களைத் திருடவே அவர்கள் அங்குச் சென்றனர். முதல்வர் அங்கிருந்து தனது தனிப்பட்ட மடிக்கணினி மற்றும் கைப்பேசியை மட்டுமே எடுத்துச் சென்றார் எனத் தற்காப்பு வாதத்தை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது என்று குறிப்பிட்டனர். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்த முடியாத சூழல் நிலவியதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது குறித்து மேற்கு வங்க அரசு மற்றும் மமதா பானர்ஜி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பினர். நிலக்கரி ஊழல் பணப் பரிவர்த்தனை I-PAC மூலம் நடந்ததாகக் கூறப்படும் புகாரில், முதல்வரே ஆதாரங்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருப்பது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மணல் குவாரி விவகாரம்: அமலாக்கத்துறை வழக்கை மாற்றக்கோரி தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!