பாகிஸ்தான் காஷ்மீரில் இந்தியா வான்வழித் தாக்குதலை நடத்திய பிறகு, பாகிஸ்தானில் பீதி நிலவுகிறது, ஷாபாஸ் ஷெரிப் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று அதிகாலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பிற பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. முசாபராபாத், கோட்லி, குல்பூர், பிம்பார், சியால்கோட், சக் அம்ரு, முரிட்கே மற்றும் பஹாவல்பூர் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா குறிவைத்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 35 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் தாக்குதல்களை பாகிஸ்தான் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் இந்திய வான்வெளியில் இருந்து நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பாகிஸ்தான் இந்தத் தாக்குதல்களைக் கண்டித்து, பதிலடி கொடுப்பதாக எச்சரித்துள்ளது. இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுடன் போர்: பாகிஸ்தான் அரசுக்கு இம்ரான் கான் சவுக்கடி..! புறக்கணிக்கும் பி.டி.ஐ..!

இந்தியத் தாக்குதல்களைக் கண்டித்து, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் தனது அறிக்கையில், ''எதிரி பாகிஸ்தானில் கோழைத்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்தியா தொடங்கிவிட்டது. திணிக்கப்பட்ட போருக்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமையும் உள்ளது. நிச்சயமாக ஒரு வலுவான பதிலடி கொடுக்கப்படும். பாகிஸ்தான் ராணுவத்திற்கு 'எதிரியை எப்படி சமாளிப்பது என்று தெரியும்'' என்று ஷெரீப் கூறினார்.
இந்தியாவின் தாக்குதல்களுக்குப் பிறகு நிலைமை குறித்து விவாதிக்க பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் புதன்கிழமை காலை தேசிய பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தை அழைத்துள்ளார். பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் கூறுகையில், ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் இந்தியாவிலிருந்து தாக்குதல்கள் நடந்துள்ளன. பஞ்சாபில் உள்ள பஹாவல்பூரும் தாக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள முரிட்கே மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லி அருகே இந்த தாக்குதல்கள் நடந்தது'' என அவர் தெரிவித்தார்.

குறைந்தது ஒன்பது இடங்கள் குறிவைக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிடப்பட்ட இடங்கள் இவை என்று இந்தியா தெரிவித்துள்ளது. தாக்குதலில் எந்த பாகிஸ்தான் ராணுவ தளமும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்பாட்டு முறையிலும் இந்தியா மிகுந்த நிதானத்தைக் காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று இரவு ஒரு அறிக்கையில், ''கட்டுப்பாட்டுக் கோடு, சர்வதேச எல்லையில் இந்திய ராணுவ நடவடிக்கைகள் குறித்து பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மிகவும் கவலை கொண்டுள்ளார். இரு நாடுகளும் அதிகபட்ச ராணுவ நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலை உலகம் பொறுத்துக்கொள்ள முடியாது'' என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு அவமானம்... வெட்கப்பட வேண்டும்... ஷாபாஸை வெளுத்தெடுத்த பாக்., கிரிக்கெட் வீரர்..!