கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி பேருந்து நிலையம் அருகில் உள்ளது அன்னை சத்யா தெரு. இந்தப் பகுதியில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய சந்திப்பு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் மண்டை ஓடு மற்றும் துணியால் ஆன பொம்மை வைத்து மாந்திரீக பூஜை வழிபாடு செய்துள்ளனர்.
இன்று காலை இந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்துவிட்டு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற போலீசார் நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் அனைத்தையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள சந்திப்பு பகுதியில் மண்டை ஓடு வைத்து அதில் உருவத்துடன் கூடிய துணியால் ஆன பொம்மை செய்து அந்த மண்டை ஓட்டிற்கு மாலை அணிவித்தும், இரண்டு புறங்களில் பூசணிக்காயை அறுத்து வைத்தும், வெற்றிலை பாக்கு வாழைப்பழம் வைத்து தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி உள்ளனர். மேலும் அந்த மண்டை ஓடு மற்றும் பொம்மையை சுற்றி மஞ்சள் குங்குமம் கொட்டி நடைபெற்ற இந்த மாந்திரீக வழிபாட்டை பார்த்து பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இதையும் படிங்க: களைக்கட்டும் வேளாங்கண்ணி மாதா திருவிழா! கொடியேற்றத்தை காண லட்சக்கணக்கானோர் பாதயாத்திரை...
இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதோடு, நள்ளிரவு நேரத்தில் இதுபோன்று பொது மக்களை பீதியை ஏற்படுத்தும் வகையில் மாந்திரீக பூஜைகள் வழிபாடுகள் நடத்திய மர்ம நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: லக்னோ வரதட்சணை மரண வழக்கில் திடீர் திருப்பம்!! மறைக்கப்பட்ட சிலிண்டர் விபத்து!!