இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (வயது 76) அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டார். 2022 முதல் 2024 வரை 9வது அதிபராகப் பதவி வகித்த ரணில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சீரமைப்பதில் முக்கியப் பங்காற்றியவர். இருப்பினும், அவரது 2023ம் ஆண்டு செப்டம்பர் மாத லண்டன் பயணம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ரணில், கியூபாவில் நடந்த G77 உச்சி மாநாட்டிற்குப் பின், தனது மனைவி மைத்ரியின் வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள லண்டனுக்கு தனிப்பட்ட பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்திற்காக அரசு நிதியில் இருந்து ரூ.1.7 கோடி செலவிடப்பட்டதாகவும், இதில் மெய்க்காப்பாளர்களின் செலவுகளும் அடங்கும் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இலங்கை CID விசாரணை நடத்தியது.
இதையும் படிங்க: 40 நாடுகளுக்கு இலவச விசா!! 5 பில்லியன் டாலர் டார்கெட்.. பொருளாதாரத்தை உயர்த்த இலங்கை பக்கா பிளான்!!
ரணில், தனது பயணச் செலவுகளை தாமே ஏற்றதாகவும், அரசு நிதி பயன்படுத்தப்படவில்லை எனவும் மறுத்தார். ஆனால், விசாரணையில் அரசு நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டது உறுதியானதை அடுத்து, அவர் இன்று கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக CID அலுவலகத்தில் ஆஜரான ரணிலிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர் கொழும்பு கோட்டை நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் ரணிலின் தனிப்பட்ட உதவியாளர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
73 வயதான ரணில், ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவராக 1994 முதல் பணியாற்றி வருகிறார். 1993-1994, 2001-2004, 2015-2018, 2018-2019 மற்றும் 2022 ஆகிய காலகட்டங்களில் இலங்கையின் பிரதமராகவும் பணியாற்றியவர். 2022இல் கோத்தபய ராஜபக்சேவின் பதவி விலகலைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றார். இவர் 2022 ஜூலை 21 அன்று நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 219 வாக்குகளில் 223 பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது ஆட்சிக் காலத்தில் இலங்கையின் பொருளாதார நிலைமையை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மக்கள் போராட்டங்கள் தொடர்ந்தன. 2024இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, அனுர குமார திசாநாயக்கவிடம் தோல்வியடைந்தார்.

ரணில் விக்கிரமசிங்கேவின் கைது இலங்கை அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தக் கைது, இலங்கையில் ஊழல் ஒழிப்பு மற்றும் அரசு நிதி பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மை குறித்து புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: 3 ஆண்டுகள் தலைமறைவு.. பிரபல கடத்தல் மன்னன் சிலுவைராஜ் கைது..!