இந்தியாவில் 1950ம் ஆண்டு மத்திய திட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த திட்டக்குழு அரசின் ஆண்டு திட்டங்கள். 5 ஆண்டு திட்டங்களை தீர்மானிக்கும் அமைப்பாகும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக 2015ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இதன்படி நிதி ஆயோக்கின் கூட்டம், பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

நிதி ஆயோக் சார்பில் பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். கடந்த 2015-ல் தொடங்கி இதுவரை 9 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற இப்படியுமா? ஸ்டாலினின் ப்ளான் இதுதான்! ஆர்.பி உதயகுமார் விளாசல்..!

கடந்த ஆண்டு ஜூலையில் டெல்லியில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, இமாசல பிரதேசம், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் அந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மட்டும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஆனால் 5 நிமிடங்களுக்கு மேல் பேச வாய்ப்பு தரவில்லை என்றும் அதற்கு மேல் பேசும்போது மைக் அணைக்கப்பட்டது என்றும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் நிதி ஆயோக்கின் 10-வது நிர்வாக குழு கூட்டத்தை டெல்லியில் பிரதமர் தலைமையில் இன்று நடந்தது. இதில் கலந்து கொள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுக்கும் இதற்கான அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இந்தியாவை வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக மாற்றும் இலக்கில் மாநிலங்களின் பங்களிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இதன்படி இந்த 10-ஆவது நிதி ஆயோக் கூட்டத்தின் மையக் கருத்தாக ‘வளா்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047’ என்ற வாசகம் முன்னிறுத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும்படி வலியுறுத்தினார். நிதி ஆயோக் கூட்டத்தில் தான் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், மத்திய வரியில் மாநிலங்களுக்கு 50% ஒதுக்கீடு தர வேண்டுமென நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்" என்று முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், மாநிலங்களுக்கு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட 41% வரிப்பகிர்வு வழங்கப்படுவதில்லை. தற்போது 33.16% மட்டுமே மாநிலங்களுக்கு வரிப்பகிர்வாக வழங்கப்படுகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

அதேபோல், 'P.M.SHRI' திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், S.S.A. நிதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2024-2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. தாமதமின்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்கத் திட்டம் தேவை. எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும் என்றும் இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வார்கள் என கோரிக்கை விடுத்ததாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்! பிரதமர் மோடியை தனியே சந்திக்க டைம் கேட்கும் மு.க.ஸ்டாலின்..!