வங்கதேச கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய சர்ச்சை ஒன்று பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான மனநிலை தீவிரமடைந்துள்ள சூழலில், முன்னாள் கேப்டன் தமிம் இக்பாலின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளாமல், அவரை மறைமுகமாக 'இந்திய உளவாளி' என்று சாடியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பி.சி.சி.ஐ. அறிவுறுத்தலால் 2026 பிரிமியர் தொடரில் கோல்கட்டா அணியில் இருந்து வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். இதற்கு பதிலடியாக, வரும் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி.) மறுத்துள்ளது. போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் அமைதியான அணுகுமுறையை வலியுறுத்தினார். “உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கக் கூடாது. இப்போது எடுக்கும் முடிவு அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: ஒபாமா ஒண்ணேமே பண்ணல!! நான் 8 போரை நிறுத்தி இருக்கேன்! நோபலுக்கு என்னை விட தகுதியானவங்க யாரு?
ஆனால் இந்த அறிவுரை பி.சி.பி. நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக பி.சி.பி. நிதிக்குழு தலைவர் நஜ்முல் இஸ்லாம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “வங்கதேச மக்கள் இன்னொரு இந்திய உளவாளியை அடையாளம் கண்டுகொள்ளலாம்” என்று மறைமுகமாக தமிம் இக்பாலை குறிப்பிட்டு சாடியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த கருத்துக்கு வங்கதேச கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முன்னாள் வீரர்கள் டஸ்கின் அஹமது, மோமினுல் ஹக், தைஜுல் இஸ்லாம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். வங்கதேச வீரர்கள் நல சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டுக்காக 16 ஆண்டுகள் சிறப்பாக விளையாடிய தமிம் இக்பாலுக்கு எதிரான இந்த கருத்து மிகவும் கண்டனத்துக்குரியது. நஜ்முல் இஸ்லாம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தி பி.சி.பி.க்கு கடிதம் அனுப்பியுள்ளது.
முன்னாள் கேப்டன் மோமினுல் ஹக் கூறுகையில், “நஜ்முலின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மீது பி.சி.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனியர் வீரரான தமிமுக்கு உரிய மரியாதை காட்டப்படவில்லை” என்று வேதனை தெரிவித்தார்.
தமிம் இக்பால் வங்கதேச கிரிக்கெட்டின் மிகச் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர். 70 டெஸ்ட் (5134 ரன்கள்), 243 ஒருநாள் போட்டிகள் (8357 ரன்கள்), 78 டி20 போட்டிகள் (1758 ரன்கள்) என மொத்தம் அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். 2007 உலகக் கோப்பை லீக் போட்டியில் (டிரினிடாட்) இவரது அரைசதத்தால் இந்தியா அப்போது தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இந்த சர்ச்சை வங்கதேச கிரிக்கெட்டின் உள்நாட்டு பதற்றத்தையும், இந்தியா மீதான உணர்ச்சிவசப்பட்ட அணுகுமுறையையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேமுதிக பக்கா ப்ளான்!! கூட்டணி அறிவிக்காததன் அசத்தல் பின்னணி! யாருக்கு கல்தா?!