கம்போடியா-தாய்லாந்து எல்லையில் மோதல் தீவிரமாகி, நிலைமை கைமீறி போயிருக்கு. இந்த மோதலால் இரு நாடுகளிலும் உயிரிழப்புகள், பெரிய அளவில் பொதுமக்கள் இடம்பெயர்வு, தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம் என பதற்றம் உச்சத்தை அடைஞ்சிருக்கு. இந்த மோதலோட விளைவுகளும், அதுக்கு பின்னால இருக்கற காரணங்களும் உலக அரங்கில் கவலையை ஏற்படுத்தியிருக்கு.
ஜூலை 24, 2025-ல் தொடங்கின இந்த மோதல், ஒரு நூற்றாண்டு பழைய எல்லைப் பிரச்னையோட தொடர்ச்சியா வெடிச்சிருக்கு. கம்போடிய படைகள் முதலில் பீரங்கி, ராக்கெட் தாக்குதல்களை தொடங்கினதா தாய்லாந்து குற்றம் சாட்டுது. கம்போடியா பக்கம், தாய்லாந்து தான் முதலில் தாக்குதல் நடத்தியதா சொல்லுது.
இந்த மோதலில், தாய்லாந்தில் 14 பொதுமக்கள், ஒரு படைவீரர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டாங்க. 32 பொதுமக்கள், 14 வீரர்கள் காயமடைஞ்சாங்க. கம்போடியாவில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டு, ஐந்து பேர் காயமடைஞ்சதா உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவிச்சார். ஆனா, கம்போடிய அரசு இன்னும் உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியிடலை.
இதையும் படிங்க: சண்டை நடக்குது! அந்த பக்கம் போகாதீங்க!! தாய்லாந்து பயணம் - இந்தியர்களுக்கு அட்வைஸ்!!
தாய்லாந்து, எல்லையோர மாகாணங்களான சாந்தபுரி, த்ராட் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் அவசரநிலை பிரகடனம் செய்திருக்கு. 1,38,000-க்கும் மேற்பட்ட தாய்லாந்து மக்கள், எல்லைப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்காங்க.
கம்போடியாவில், ஓட்டர் மீன்சே மாகாணத்தில் 5,000 பேர் வெளியேற்றப்பட்டு, 20,000 பேர் எல்லையில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டிருக்காங்க. மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள், பள்ளிகள் மீது தாக்குதல்கள் நடந்ததால், பொதுமக்கள் பயத்தோட முகாம்களில் தஞ்சமடைஞ்சிருக்காங்க.
இந்த மோதலோட மூலம், 1907-ல பிரெஞ்சு காலனி ஆட்சியின்போது வரையப்பட்ட எல்லை வரைபடத்துல இருக்கற பிரச்னைகளுக்கு போகுது. பிரேஹ் விஹேர், தா மோன் தோம் போன்ற புராதன கோயில்கள் உள்ள பகுதிகள் இரு நாடுகளாலும் உரிமை கொண்டாடப்படுது.

1962-ல் சர்வதேச நீதிமன்றம் பிரேஹ் விஹேர் கோயிலை கம்போடியாவுக்கு வழங்கினாலும், இந்த எல்லைப் பிரச்னை தீரலை. 2008-2011-ல் நடந்த மோதல்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டது இதுக்கு முன்னுதாரணம். மே 2025-ல் ஒரு கம்போடிய வீரர் கொல்லப்பட்டதும், ஜூலை 23-ல் தாய் வீரர்கள் மிதிபட்ட மண்ணு வெடிகுண்டு சம்பவமும் இந்த மோதலை மறுபடியும் தூண்டியிருக்கு.
தாய்லாந்து F-16 விமானங்கள் மூலமா கம்போடிய படை இலக்குகளை தாக்கியிருக்கு, கம்போடியா BM-21 ராக்கெட்கள் பயன்படுத்தியதா குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கு. இரு நாடுகளும் ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சாட்டிக்கறாங்க.
தாய்லாந்து தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சயாச்சை, “இது போர் அறிவிப்பு இல்லை, ஆனா நிலைமை போருக்கு மாறலாம்”னு எச்சரிச்சிருக்கார். கம்போடிய பிரதமர் ஹுன் மனெட், அமைதி ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவிச்சாலும், தாய்லாந்து தாக்குதலை நிறுத்தணும்னு கோரியிருக்கார்.
ஐநா, அமெரிக்கா, சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் இந்த மோதலை நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலமா தீர்க்கணும்னு வலியுறுத்தியிருக்காங்க. ஆனாலும், இரு நாடுகளிலும் தேசியவாத உணர்வும், அரசியல் நெருக்கடியும் இந்த மோதலை மேலும் சிக்கலாக்குது. தாய்லாந்தில் அரசியல் நிலையின்மையும், கம்போடியாவில் ஹுன் சென்னின் செல்வாக்கும் இதை தீவிரப்படுத்தியிருக்கு. இந்த சூழல்ல, அமைதி ஏற்படுத்தறது பெரிய சவாலா இருக்கு.
இதையும் படிங்க: தாய்லாந்து - கம்போடியா இடையே வெடித்தது மோதல்.. வான்வெளி தாக்குதலில் 14 பேர் பலி..!